இந்தியாவில் ஒரே பாலின திருமணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், "இதயங்கள் ஒன்றாக இருக்கும்போது" மக்களின் விருப்பத்தேர்வுகள் முக்கியமில்லை என்று பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
உலகின் பல நாடுகளில் ஒரே பாலின திருமணம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் சில நாடுகள் இந்த வகையான திருமணத்திற்கு தடை விதித்துள்ளது. அந்த நாடுகளில் பட்டியலில் இந்தியாவும் ஒன்று. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் ஒரே பாலின திருமணம் தொடர்பான பேச்சுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த வகையான திருமணத்திற்கு ஒரு சாரார் எதிர்ப்பும், ஒரு சாரார் ஆதரவும் அளித்து வரும் நிலையில், இந்தியாவில் இந்த திருமணத்திற்கு அனுமதி இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இதனிடையே தேசிய விருது வென்றவரும் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையுமான கங்கனா ரணாவத் திருமணம் "அன்பின் பந்தம்" "இதயங்கள் ஒன்றாக இருக்கும்போது" மக்களின் விருப்பத்தேர்வுகள் முக்கியமில்லை என்று ஒரே பாலின திருமணத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
ஹரித்வாரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த கங்கனா ரனாவத்,“திருமணம் என்பது அன்பின் பந்தம். மக்களின் இதயங்கள் ஒன்றாக இருக்கும்போது... அவர்களின் விருப்பம் என்ன, அதைப் பற்றி நாம் என்ன சொல்ல முடியும்? என்று கூறியுள்ளார். கங்கனாவின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், பிரபல திரைப்பட எழுத்தாளது அபூர்வா அஸ்ரானி கங்கனாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
கங்கனா ரணாவத்தின் நடிப்பில் கடந்த 2017 ம் ஆண்டு வெளியான சிம்ரன் என்ற படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றிய அபூர்வா அஸ்ரானி, தனது ட்விட்டர் பதிவில், பெரும்பாலான நட்சத்திரங்கள் இந்த வகை திருமணம் குறித்து பேசுவதற்கு வெட்கப்படும் நேரத்தில் “திருமண சமத்துவத்தை” ஆதரித்ததற்காக கங்கனாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் "தாராளவாத' ஊடகங்களால் 'ரத்துசெய்யப்பட்ட' ஒருவருக்கு கருத்து தெரிவிக்க உரிமை இல்லையா? அவளுடைய அறிக்கை மனிதாபிமானமாகவும், துணிச்சலாகவும், நேரத்துக்கு ஏற்றதாகவும் இருந்தாலும் கூட? திருமண சமத்துவத்திற்காக கங்கனா ரணாவத் பேசுகிறார். பெரும்பாலான சினிமா நட்சத்திரங்கள் செய்ய வெட்கப்படும் விஷயம். ஆனால் இவர் பேசியிருக்கிறார். அதற்காக நன்றி என்று வெளிப்படையாக ஓரின சேர்க்கையாளரான அஸ்ரானி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரும் மனுக்கள் மீதான வாதங்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எஸ்.ரவீந்திர பட், பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“