தனது இரு குழந்தைகளுடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தை சந்தித்தாக பிரபல பாடகி சின்மயி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவு ஒன்று இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
கடந்த 2002-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தில், ‘’ஒரு தெய்வம் தந்த பூவே’’ என்ற பாடலை பாடி பட்டி தொட்டி எங்கிலும் பிரபலமானவர் பாடகி சின்மயி. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து பாய்ஸ், வசீகரா, நியூ, வெயில் உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடியுள்ள சின்மயி டப்பிங் கலைஞராகவும் பல நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். 20 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் பயணித்து வரும் சின்மயி, கடந்த 2014-ம் ஆண்டு ராகுல் ரவீந்தர் என்பரை திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு இரட்டை ஆண் குழந்தை பிறந்த நிலையில், அவ்வப்போது தனது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அதேபோல் மீடு விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீது சின்மயி அளித்த புகார் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது வீட்டில் குழந்தைகளை பார்த்துக்கொள்வதில் பிஸியாக இருந்தாலும் சின்மயி அவ்வப்போது திரைப்படங்களில் பாடல்களை பாடி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான சமந்தாவின் குஷி படத்திலும் பாடல் பாடியிருந்த சின்மயி தற்போது தனது குடும்பம் மற்றும் இரு குழந்தைகளுடன் காரில் செல்லும்போது விபத்தில் சிக்கியதாக தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவில், சின்மயி தன்னுடைய இரட்டை குழந்தைகள், மற்றும் குடும்பத்தினருடன், காரில் சென்றபோது, குடிபோதையில் எதிரே வந்த ஆட்டோ ஓட்டுநர், தான் வந்த காரில் இடித்துவிட்டு வண்டியை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். அதிஷ்டவசமாக எனக்கும், என்னுடைய குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் யாருக்கும் எதுவும் ஆகவில்லை என கூறியுள்ளார்.
சின்மயி வெளியிட்டுள்ள இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஒருசிலர் அவரை நலம் விசாரித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“