இந்திய சினிமாவில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள பாடகி எஸ்.ஜானகி தன்னை வீட்டில் வந்து பாராட்டியது இருவர் தான் என்று மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னணி பின்னணி பாடகிகளில் முக்கியமானவர் எஸ்.ஜானகி. 1957-ம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜன் இயக்கத்தில் மகதல நாட்டு மேரி என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமான இவர், தொடர்ந்து, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி, இளையராஜா, சங்கர் கணேஷ், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
கடைசியான ஜீவா நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான திருநாள் படத்தில் தந்தையும் யாரோ என்ற பாடலை பாடியிருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் இந்திய தெலுங்கு கன்னடம் மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள எஸ்.ஜானகி, தனது 16 வயதில் கல்லூரி விழா ஒன்றில் பாட தொடங்கிய இந்த பயணம் தற்போதுவரை தொடர்ந்து வருகிறது.
இந்திய சினிமாவில் பல நூறு பாடல்களை பாடியிருந்தாலும், தன்னை வீட்டுக்கு வந்து பாராட்டியது இருவர் தான் என்று எஸ்.ஜானகி கூறியுள்ளார். கடந்த 1996-ம் ஆண்டு பார்த்திபன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான படம் தான் புள்ளக்குட்டிக்காரன். இந்த படத்தை சீதா பார்த்திபனே தயாரித்திருந்தார். சங்கீதா, ஊர்வசி, பிரகாஷ்ராஜ், வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
தேவா இசையமைப்பில் உருவான இந்த படத்திற்கு அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார். இந்த படத்தில் வரும் மெட்டி மெட்டி என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் ஒரு பாடலாக இருக்கிறது. திக்குவாய் உள்ள ஒரு பெண் பாடுவது போல், பாடகி எஸ்.ஜானகி அற்புதமாக இந்த பாடலை பாடியிருந்தார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது.
இந்த படம் வெளியான பிறகு, எஸ்.ஜானகியை சந்தித்த பார்த்திபன் – சீதா தம்பதி அவரின் வீட்டுக்கே சென்று பாராட்டியுள்ளனர். அதேபோல் 1995-ம் ஆண்டு அர்ஜூன் 2 வேடங்களில் நடித்து வெளியான கர்ணா படத்தில் இடம் பெற்ற ‘’மலரே மௌனமா’’ என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் ஒரு க்ளாசிக் பாடலாக இருக்கும் நிலையில், இந்த பாடலுக்காக நடிகர் அர்ஜூன் ஜானகியின் வீடு தேடி சென்று பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கியுள்ளார். இந்த தகவலை எஸ்.ஜானகி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“