துணிவு படம் கொடுத்த வெற்றியின் மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் அஜித் தற்போது தனது பைக்கில் உலக சுற்றுலா சென்றுள்ள நிலையில், ரசிகர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள நடிகர்களில் முக்கியமானவர் அஜித் குமார். தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வரும் அஜித் நடிப்பில், கடந்த பொங்கல் தினத்தில் வெளியான துணிவு படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. எச்.வினோத் இயக்கிய இந்த படம் வசூல் ரீதியாகவும் பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் அடுத்த படம் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு இயக்குனர் மகிழ் திருமேனி அஜித்தின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. தற்போது இந்த படத்தின் கதை விவாதம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அஜித் தற்போது தனது உலக டூர் பயணத்தை தொடங்கியுள்ளார்.
நேபாளத்தில் இருந்து தனது உலகச் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள அஜித் இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அடுத்ததாக பூட்டானுக்குச் செல்கிறார். இதனிடையே நேபாளத்தைச் சேர்ந்த அஜித்தின் ரசிகர்கள் அவருடன் எடுத்துக்கொண்ட படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, நேபாளத்தில் உள்ள மற்ற சமையல் கலைஞர்களுடன் அஜீத் சமையல் செய்யும் வீடியோ, பலரது வரவேற்பைப் பெற்றுள்ளது.
அந்த வீடியோவில், நல்ல சமையல்காரராக அறியப்பட்ட அஜித், மற்ற சமையல்காரர்களுடன் சமையலறையில் பிஸியாக இருப்பது போல் தெரிகிறது. இந்த பயணத்தில் இருந்து நடிகரின் பல வீடியோக்கள் மற்றும் படங்கள் வைரலாகி வருகின்றன.
இந்தியன்எக்ஸ்பிரஸ்.காமிடம் பேசிய அஜித் குமாருக்கு நெருக்கமான ஒருவர் அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி அவர் தமிழகத்தில் இருக்கமாட்டார் என்றும், அதற்கு பதிலாக பூடானில் நடிகர் தனது 52வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் என்று கூறியுள்ளார்.
மே மாதத்தின் நடுப்பகுதியில் அவர் தமிழகம் திரும்புவார் மற்றும் அவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பு, தற்காலிகமாக AK62 என்று பெயரிடப்பட்டுள்ளது, மே மாத இறுதியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil