விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின், 10-வது சீசன் முடிவுக்கு வந்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஜான் ஜெரோம் சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்களை நடத்தி முன்னணியில் இருப்பது விஜய் டிவி. இந்த டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 9 சீசன்கள் முடித்திருந்த இந்த நிகழ்ச்சியின் 10-வது சீசன், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில், நிகழ்ச்சிக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது.
விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளர்களான மாகாப ஆனந்த் பிரியங்கா ஆகியோர் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில், ஜான் ஜெரோம், ஜீவிதா, வைஷ்ணவி, ஸ்ரீனிதி, விக்னேஷ் ஆகிய 5 போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவாங்கூர் கிராமத்தை சேர்ந்த ஜான் ஜெரோம் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். இறுதிப்போட்டியில் பாட்ஷா படத்தில் இடம்பெற்றிருந்த டைட்டில் பாடலான நான் ஆட்டோக்காரன் பாடலை பாடி ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
சாம்பியன் பட்டம் வென்ற ஜான் ஜெரோம்க்கு ரூ60 லட்சம் மதிப்பிலான வீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், 2-வது இடம் பிடித்த ஜீவிதாவுக்கு ரூ10 லட்சமும், 3-வது இடம் பிடித்த வைஷ்ணவிக்கு ரூ5 லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல் 4-வது மற்றும் 5-வது இடம் பிடித்த விக்னேஷ் மற்றும் ஸ்ரீனிதி ஆகிய இருவருக்கும் தலா 3 லட்சம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. சாம்பியன் பட்டம் வென்றது குறித்து ஜான் அப்பா கூறுகையில், உப்புக்கல்லை வைரமாக மாற்றிவிட்டீர்கள். விஜய் டிவி மற்றும் சூப்பர் சிங்கர் நடுவர்களுக்கு எனது நன்றி. என் பையன் இந்த அளவுக்கு பாடி இப்படி ஒரு இடத்தை பிடிப்பான் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. அவனுடைய கடுமையாக முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது, இறைவனுக்கு றன்றி என்று கூறியுள்ளர்.
தொடர்ந்து பேசிய ஜான் ஜெரோம், எங்க ஊரில் இருக்கும் யாருக்கும் என்னை யார் என்றே தெரியாது. ஆனால் இப்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் எங்கள் ஊரில் பலருக்கும் என்னை தெரிய வைத்திருக்கிறது. நான் தவறு செய்தாலும், இந்த இசைக்குழுவில் உள்ளவர்வர்கள் என்னை ஆதரித்து நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தார்கள். நடுவர்கள் அனைவருமே ஒவ்வொரு முறை பாடும்போதும் உன்னால் முடியும் என்று எனக்கு ஊக்கம் கொடுத்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி. என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இதேபோல் தொடர்ந்து பாடிக்கொண்டே இருப்பேன். அதுதான் என் ஆசை என்று கூறியுள்ளார். சூப்பர் சிங்கர் சாம்பியனான ஜெரோம்க்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“