விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின், 10-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று நடைபெற்ற இந்த சீசனின் இறுதிப்போட்டியில் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜான் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்களை நடத்தி முன்னணியில் இருப்பது விஜய் டிவி. இந்த டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 9 சீசன்கள் முடித்திருந்த இந்த நிகழ்ச்சியின் 10-வது சீசன், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. போட்டியாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது திறமையை நிரூபித்து நடுவர்களின் பாராட்டை பெற்று வந்தனர்.
விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளர்களான மாகாப ஆனந்த் பிரியங்கா ஆகியோர் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில், ஜான் ஜெரோம் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். இறுதிப்போட்டியில் பாட்ஷா படத்தில் இடம்பெற்றிருந்த டைட்டில் பாடலான நான் ஆட்டோக்காரன் பாடலை பாடி அசத்திய ஜான் ஜெரோம் நடுவர்களின் பாராட்டுக்களை பெற்றதோடு, ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
மொத்தம் 6 பேர் பங்கேற்ற இறுதிப்போட்டியில், ஜீவிதா 2-வது இடம் பெற்ற நிலையில், வைஷ்ணவி 3-வது இடத்தை பெற்றார். சூப்பர் சிங்கர் பட்டம் வென்ற ஜான் ஜெரோம்க்கு 60 லட்சம் மதிப்பிலான பிரம்மாண்ட வீடு வழங்கப்பட்டது. அதேபோல் 2-வது இடம் பெற்ற ஜீவிதாவுக்கு ரூ10 லட்சமும், 3-வது இடம் பெற்ற வைஷ்ணவிக்கு ரூ5 லட்சமும் பரிசாக வழங்கப்பட்ட நிலையில், 4-வது மற்றும் 5-வது இடத்தை பெற்ற ஸ்ரீனிதி மற்றும் விக்னேஷ் ஆகிய இருவருக்கும் தலா ரூ3 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
முதல் 3 இடங்களை தவிர்த்து கடைசி 2 இடங்களை பிடித்த போட்டியாளர்களுக்கும் தற்போது பரிசு வழங்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“