தற்போது தன்னிடம் பணம் இல்லை நிச்சயமாக பணம் வந்ததும் தென் மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்திப்பேன் என்று சின்னத்திரை நட்சத்திரமான கே.பி.ஒய் பாலா தென்காசியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் கே.பி.ஒய்.பாலா. தனது காமெடியான ஒன்லைனர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரை வெள்ளித்திரையில் நடித்து வந்தாலும், பாலா சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
மலை கிராம மக்களுக்கு உதவும் வகையில் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த பாலா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகருக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார். கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் நடிகர்கள் இவரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று, சினிமா விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பாலாவின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் சமீபத்தில் பெய்த கனமழையினால் வெள்ளத்தில் மூழ்கிய சென்னையில், தான் முதன் முதலில் தங்கியிருந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தன்னால் முடிந்த பண உதவியை செய்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பாலாவின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்த நிலையில், தற்போது பாலாவின் கவனம் தென் மாவட்டங்கள் பக்கம் திரும்பியுள்ளது.
கடந்த வாரம் பெய்த கனமழையினால், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில, பொதுமக்கள் பலரும் தங்கள் வாழ்வாதரங்களை இழந்து அத்தியாவசிய தேவைகள் கூட கிடைக்காமல் போராடினர். இந்த நிலையில் மக்களுக்கு உதவ அரசியல் கட்சியினர், அமைச்சர்கள் என பலரும் களத்தில் இறங்கிய மீட்பு பணிகபளில் ஈடுபட்டிருந்தனர்.
தற்போது நிலைமை சீரடைந்து வரும் நிலையில் தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்த பாலாவிடம், சென்னையில் உதவி செய்த நீங்கள் தென்மாவட்டங்களுக்கு உதவி செய்வீர்களா என்று கேட்டனர். இதற்கு பதில் அளித்த பாலா கண்டிப்பாக உதவி செய்வேன். இப்போது என்னிடம் பணம் இல்லை பணம் வந்ததும் நிச்சயமாக தென்மாவட்டங்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்வேன்.
என்னுடைய செயலை பார்த்து அன்புமணி ராமதாஸ் சார், சீமான் அண்ணா ஆகியோர் பேசினார்கள். அவர்களுக்கு என் நன்றி சின்ன வயசில் இருந்தே பொதுமக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பது என் ஆசையாக இருந்தது. அதைத்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறேன். நான் வைத்திருந்த ரூ5 லட்சம் பணம் காலியாகிவிட்டது. அடுத்து எனக்கு பணம் வரும்போது தென் மாவட்டங்களுக்கு நான் வருவேன். மக்கள் தான் என்னை ஓட வைத்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு என் நன்றி என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“