தமிழ் சின்னத்திரை கலைஞர்கள் என்றாலே நினைவுக்கு வருவது விஜய் டி.வி பிரபலங்கள். அதிகமான ரியாலிட்டி ஷோக்களை நடத்தி ரசிகர்கள் மத்தியில் காமெடி கலைஞர்களை பிரபலப்படுத்திய பெருமை விஜய் டிவிக்கு உண்டு. இதில் என்னம்மா இப்படி பண்றீங்ளேமா என்ற ஒற்றை வரியின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் ராமர்.
என்னம்மா ராமர் என்றால் அனைவருக்கும் அத்துபடி என்று சொல்லும் காலம் போய் தற்போது ராமர் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் ஒரு நபராக மாறிவிட்டார் ராமர். ஆத்தாடி என்ன உடம்பி என்று பல பாடல் வரிகளை மாற்றி சொல்லி காமெடியில் சிரிக்க வைக்கும் ராமர் ஒரு அரசு அதிகாரி என்பது பலரும் அறிந்திடாத உண்மை.
மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகிலுள்ள அரிட்டாபட்டி கிராமத்தை சேர்ந்த ராமர், சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வமாக இருந்துள்ளார். பள்ளி கல்லூரி என படித்து வந்தவர், தனது மாமாவுடன் இணைந்து ஆர்.டி.ஓ அலுவலகத்தில் தற்காலிகமாக வேலையில் சேர்ந்துள்ளார்.
அதே சமயம் இடையில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உள்ளூர் மற்றும் வெளியூரில், சின்ன சின்ன நிகழ்ச்சிகளின் மூலம் தனது திறமையை வெளிகாட்டிய ராமர் கல்லுாரி விரிவுரையாளரான கிருஷ்ணவேனி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் என 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் ஆய்வின் போது 18 சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் சின்னத்திரை கலைஞர் விஜய்டிவி புகழ் ராமர் அவர்களை சந்திதேன் என்று புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்த பதிவு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதுநாள் வரை ராமர் ஒரு கலைஞர் என்று அறிந்திருந்த அவரது ரசிகர்களுக்கு தற்போது அவர் ஒரு அரசு அதிகாரி என்ற செய்தியை கேட்டு இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“