விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கிய இயக்குனர் தாய் முத்துசெல்வம் இன்று மரணமடைந்தார். அவருக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான நியூடனின் 3-ம் விதி படத்தை இயக்கியவர் தாய் செல்வம். தொடர்ந்து 2017-ம் ஆண்டு வெளியான விஜய் டிவியின் மௌனராகம் சீரியல் மூலம் சின்னத்திரையில் தொடர்களை இயக்கிய இவர், ஈரமான ரோஜாவே நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட தொடர்களை இயக்கியுள்ளார்.
இவர் இயக்கிய மௌனராகம் சீரியல் 863 எபிசோடுகள் சென்ற நிலையில், 2018-ம் ஆண்டு வெளியான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் 579 எபிசோடுகளை கடந்தது. ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்த சீரியல் பாதியில் நிறுத்தப்பட்டு நாம் இருவர் நமக்கு இருவர் 2 என்ற பெயரில் புதிய சீரியல் தொடங்கப்பட்டது.
இதனிடையே காத்து கருப்பு, கல்யாணம் முதல் காதல் வரை, பாவம் கணேசன் உள்ளிட்ட தொடர்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய நியூட்டனின் மூன்றாம் விதி திரைப்படம் ரிவேஜ் த்ரில்லராக திரைக்கதை அமைத்திருந்தார். இந்த படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது. மேலும் ஆவி குமார் என்ற படத்திற்கு எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.
தற்போது விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலின் 2-ம் பாகத்தை இயக்கி வந்த இயக்குனர் தாய் செல்வம், உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“