குக் வித் கேமாளி நிகழ்ச்சியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு விலகிய நடிகை மணிமேகலை மீண்டும் இந்த நிகழ்ச்சியில் என்டரி ஆகியுள்ளார். இது தொடர்பான ப்ரமோ வைரலாகி வருகிறது.
Advertisment
ரியாலிட்டி ஷோக்கள் நடத்துவதில் முக்கிய பங்காற்றும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரும் பிரபலம். சமையல் கலைஞர்களும் அவர்களுக்கு உதவும் வகையில் கோமாளிகளும் காமெடியாக பேசிக்கொண்டே சமைக்கும் இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இதில் பங்கேற்றும் பலரும் சினிமாவில் வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
இதுவரை 3 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது 4-வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதுவரை கோமாளியாக புகழுடன் சேர்ந்து கலக்கிய நடிகை சிவாங்கி தற்போது குக்காக சமையலில் அசத்தி வருகிறார்.
இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இந்நிகழ்ச்சியில் டாப் 5 இடத்தை பிடிக்க குக்கள் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், சிவாங்கி முதல் ஆளாக டாப் 5-க்குள் நுழைந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இதனிடையே இந்த சீசனின் தொடக்கத்தில் சில எபிசோடுகள் கோமாளியாக கலந்துகொண்ட மணிமேகலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அவரது அறிவிப்பு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், விலகலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனாலும் அவர் கர்ப்பமாக இருப்பதன் காரணமாக விலகிவிட்டார் என்றும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் மணிமேகலைக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் விலகிவிட்டதாகவும் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து இனி அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரமாட்டார் என்று தகவல் வெளியானது.
தற்போது அந்த தகவலை பொய்யாக்கும் விதமாக மணிமேகலை மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி ஆகியுள்ளார். போர் தொழில் படத்தில் நடித்துள்ள நடிகர் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். இந்த எபிசோட்டின் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ள நிலையில், இதில் மணிமேலை ரீ-என்டரி ஆகியுள்ளது தெரியவந்துள்ளது.
வழக்கம்போல் குக் அல்லது கோமாளியாக இல்லாமல் தற்போது மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார். ஏன் விலகினார் இப்போது எப்படி ரீ-என்டரி கொடுத்துள்ளார் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில், இனி அதற்கான பதிலை மணிமேகலை சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“