சின்னத்திரையில் முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்களை ஒளிபரப்பி வரும் ஜீ தமிழில், அவ்வப்போது புதிய சீரியல்கள் ஒளிபரப்பை தொடங்குவதும், பழைய சீரியல்கள் முடிவுக்கு வருவதும் தொடர்ந்து வருகிறது. இந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் சீரியல்களும் திடீரென முடிவுக்கு வரும் நிலையும் ஏற்படுவதால், சின்னத்திரை ரசிகர்கள் அதிர்ச்சியும் சோகமும் அடைவது வழக்கம்.
குறிப்பாக ஒரு சீரியல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவி்ட்டால், அந்த சீரியல் முடிவுக்கு வருகிறது என்ற தகவல் வெளியானாலே சமூகவலைதளங்களில், இந்த சீரியல் தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துவிடும். அந்த வகையில் ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது அந்த சீரியல் மீண்டும் ஒளிபரப்பாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது ஜீ தமிழின் இதயம் சீரியல் முடிவுக்கு வர உள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியலில் ஜனனி அசோக் குமார், ரிச்சர்ட் ஜோஸ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். பாரதி ஆதி என இரு கேரக்டரை சுற்றி திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த சீரியலில், பாரதியின் கணவர் இதயத்தை ஆதிக்கு எடுத்து வைத்திருப்பார்கள். இதனால் கணவரை இழந்த பாரதியை, ஆதி காதலித்து திருமணம் செய்துகொள்வார்.
இதன் பிறகு என்ன நடந்தது, ஆதிக்கு, பாரதியின் கணவர் இதயம் தான் தனக்கு இருக்கிறது என்ற உண்மை தெரியவந்ததா? பாரதி எடுக்கும் முடிவு என்ன? வீட்டில் நடக்கும் சூழ்ச்சிகளில் இருந்து பாரதி தப்பித்தாரா என்பதை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வர உள்ளது. இந்த சீரியலின், இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று (மார்க் 05) முடிவடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், விரைவில், இதயம் சீரியலின் 2-வது சீசன் ஒளிபரப்பாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளித்தாலும் சீரியலின் தற்போதைய முடிவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.