சென்னை மெரினாவில் புதுப்பிக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவிடத்தை கலைஞர் தாஜ்மஹால் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்த்து. இந்த பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இந்த புதுப்பிக்கப்பட்ட நினைவிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து முன்னாள் தி.மு.க தலைவர்களாக அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதல்வர் அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், தி.மு.க முக்கிய தலைவர்கள் கூட்டணி கட்சி தலைவர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் இருக்கைக்கு அருகில் நடிகர் ரஜினிகாந்துக்கு இருக்கை அமைக்கப்பட்டிருந்தது. இந்த நினைவிடம் குறித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், இதை கலைஞர் நினைவிடம் என்று சொல்வதை விட, கலைஞர் தாஜ்மஹால் என்று சொல்லலாம் என உருக்கமாக பேசியுள்ளார்.
புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பேட்டரி கார் மூலம், நினைவிடத்தை சுற்றி பார்வையிட்டார். அப்போது அவருடன் ரஜினிகாந்தும் அந்த காரில் பயணித்தார். இந்த பயணத்தின் போது நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் குறித்து மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்துக்கு விளக்கி கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“