தளபதி விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு அக்டோபர் மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில், இந்த மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் இந்த மாநாட்டுக்கு வரும் தடைகளை தகர்க்க விஜய் புதிய வியூகம் அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள நடிகர்களில் ஒருவராக இருக்கும் தளபதி விஜய், பல வெற்றிப்படங்களை கொடுத்தள்ள நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்காக விண்ணப்பித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது கட்சியின் கொடியை வெளியிட்ட விஜய், அடுத்து செப்டம்பர் 23-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில், தனது முதல் அரசியல் மாநாட்டை நடந்த முடிவு செய்து இதற்காக காவல்துறை அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி மனு கொடுத்திருந்தார். இந்த மாநாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்து காவல்துறை ஆலோசனை நடத்தி பல்வேறு கேள்விகளை முன் வைத்தது.
காவல்துறையின் கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளிக்க முடியாத நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் தேதி அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி அக்டோபர் மாத இறுதியில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி அருகே, வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ள நிலையில, ஒவ்வொரு தொகுதியிலும் 1000 பேர் வீதம் மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு ஆந்திரா, கேரளா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் இருந்து விஜய் ரசிகர் மன்றங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாநாட்டுக்கு 5 முதல் 15 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என்று கட்சியில் சார்பில் எதிர்பார்க்கின்றனர். இதனால் தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த மாநாட்டு நடத்துவதற்கு ஏற்படும் தடைகளை தகர்த்தெறியும் வகையில், விஜய் புதிய வியூகம் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, மாநாட்டுக்கு வரும் வாகனங்களின் பதிவெண், இன்சூரன்ஸ், ஆர்.சி. புத்தகத்தை முன்கூட்டியே கட்சி தலைமைக்கு அனுப்ப வேண்டும் என்று கட்டளை இட்டுள்ள தலைவர் விஜய், தொண்டர்களின் போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொள்ள தனியாக ஒரு வழக்கறிஞர் பிரிவை உருவாக்கி உள்ளார். மாநாட்டிற்கு வரும் பொது வாகனங்களுக்கு யாரேனும் தடை ஏற்படுத்தினாலோ, வாகனங்கள் பிரச்சினையில் சிக்கினாலோ அதை தீர்க்க தனியாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு மாவட்ட கட்சி நிர்வாகிகளும், குறைந்தது 6,000 முதல் 10,000 பேரை அழைத்து வர வேண்டும் என கட்டளையிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அரசியலில் தீவிரம் காட்டி வரும் விஜய், அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படமே திரைத்துறையில் அவரின் கடைசி படமாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.