முன்னாள் முதல்வர் காமராஜரை பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு பேசியதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள கே.பி.முனுசாமி, காமராஜரை யாருடனும் ஒப்பிட கூடாது என்று கூறியுள்ளார்.
என் மண் என் மக்கள் என்று தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்டார். இதில் திமுக ஆட்சி குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்த அண்ணாமலை, இந்தியாவில் சமூக நீதிக்கு இரண்டு தலைவர்களைத்தான் உதாரணமாகக் கூற முடியும். கர்மவீரர் காமராஜர் மற்றும் பாரதப் பிரதமர் மோடி அவர்கள்.
கர்மவீரர் காமராஜர் அவர்களைப் போலவே, நமது பிரதமர் அமைச்சரவையில் 80% இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் உள்ளனர். மோடி அவர்கள் வந்தால்தான், தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி மலரும் என்று பேசியிருந்தார். அண்ணாமலையின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
கிருஷ்ணகிரியில் பாதயாத்திரை மேற்கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை, கர்ம வீரர் காமராஜரை மோடியுடன் ஒப்பிட்டு பேசி வருகிறார். காமராஜர் மிகப்பெரிய தலைவர். அவருடன் எந்த அரசியல்வாதியையும் ஒப்பிட்டு பேச முடியாது. மாநிலங்கள் நடத்தும் தொழில் முனைவோர் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று, இது பாதுகாப்பான மாநிலம் நீங்கள் இங்கே தொழில் தொடங்கலாம் என்று பேசியிருந்தால், அண்ணாமலை சொல்வதை வரவேற்கலாம்.
இந்தியாவின் பிரதமரான மோடி, குஜராத்தில் தொழில் முனைவோர்களை அழைத்து பேசுகிறார். அதனால் தமிழ்நாட்டை விமர்சிக்க அண்ணாமலைக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. அதிமுக ஆட்சியில் தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்த மாநிலமாக இருந்துள்ளது. அண்ணாமலை தான்தோன்றித்தனமாக பேசி வருவது நாகரீக அரசியலுக்கு உகந்தது அல்ல. திராவிட கட்சியில் தான் ஊழல் இருப்பதாக சொல்கிறார். போலீஸ் அதிகாரியாக இருந்த அவருக்கு, சிந்தனை அனைத்தும் குற்றவாளிகளை பற்றியே இருக்கும். அதனால் தான் அனைவரையும் குற்றவாளிகளாக பார்க்கிறார்.
2026 தேர்தலில் மக்கள் திமுகவை தூக்கி எறிவார்கள். திமுககாரர்களே அக்கட்சியின் மீது இருந்த நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். இதனால் அனைவரும் அதிமுகவில் இணைந்து வருகிறனர். விரைவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“