அண்ணா பல்கலைகழகம் சார்பில் நடிகர் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது போலி டாக்டர் பட்டம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற பெயரில் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தி அண்ணா பல்கலைகழகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த அழைப்பு சார்பில் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவர், நடன இயக்குனர் சாண்டி, நிகழ்ச்சி தொகுப்பாளர் ஈரோடு மகேஷ் உள்ளிட்ட சிலருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதனிடையே இந்த டாக்டர் பட்டத்திற்கும் அண்ணா பல்கலைகழகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக துணைவேந்தர் வேல்ராஜ் கூறுகையில், அண்ணா பல்கலைகழகம் சார்பில் போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதியையும் அண்ணா பல்கலைகழகத்தையும் ஏமாற்றியுள்ளனர். தனியார் நிறுவன பட்டமளிப்பு விழாவுக்காக அண்ணா பல்கலைகழக அரங்கத்தை பயன்படுத்தியுள்ளனர். புனிதமான அண்ணா பல்கலைகழகத்தில் இது போன்ற தவறான செயல் நடந்ததற்கு வருந்துகிறோம்.
இது குறித்து போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம். மேலும் ஆளுனரின் செயலாளர், உயர்கல்வித்துறைக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசையும், ஆளுனர் மாளிகையையும் வலியுறுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளார். மேலும் இனி அண்ணா பல்கலைகழக அரங்கை வாடகைக்கு விடுவதில் கடுமையான விதிமுறைகளை பின்பற்றுவோம் என்றும், தனியாருக்கு அரங்கு வாடகைக்கு விடுவதை நிறுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/