தமிழக சட்டசபையில் எதிர்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க கோரி, அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி இது குறித்து விளக்கம் அளிக்க சபாநாயகருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்றியது. இதில் எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமியும், எதிர்கட்சி துணைத்தலைவராக ஒ.பன்னீர்செல்வமும் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது அதிமுகவில் இருந்து ஒ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதால், அவரது எதிர்கட்சி துணைத்தலைவர் பதவிக்கு ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்திருந்தார்.
இது குறித்து சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காத நிலையில், அதிமுக தரப்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தாக்கல் செய்துள்ள மனுவில், 2021-ம் ஆண்டு மே மாதம் நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவராக நானும், துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் தேர்ந்தெடுக்கபட்டோம். 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பன்னீர்செல்வம், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, 2022-ம் ஆண்டு, ஜூலை17-ல் கட்சியின் எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி. உதயக்குமார், துணைச்செயலாளராக அக்ரி கிருஷ்ண்மூர்த்தியை நியமித்து சபாநாயருக்கு கடிதம் அனுப்பி வைத்தோம். 5 முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கையின் மீது சபாநாயகர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை மாற்றியமைக்க சபாநாயகரிடம் முறையிட்டோம். அது தொடர்பாகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கட்சியில் இருந்து சட்டமன்ற பதவிகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கபட்டவர்களை அங்கீகரிக்க, சபாநாயகர் மற்றும் சட்டமன்ற செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இந்த மனு குறித்து சட்டமன்ற செயவலாளர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் வரும் டிசம்பர் 12-ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“