சென்னையில் கடந்த 2 தினங்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில், விஐபி-க்கள் குடியிருக்கும் தேனாம்பபேட்டை பகுதியிலும் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக வலு பெற்றுள்ள நிலையில், கடந்த இரு தினங்களாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை நகரம் நீரில் மூழ்கியுள்ள நிலையில், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. மேலும் பல பகுதிகளில் மழைநீர் வீட்டிற்குள் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மழை நீர் புகுந்ததால் வீட்டில் இருந்து வெளியேறிய பலரும் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ள நிலையில், உணவு மற்றும் அத்தியாவசிய தேவைக்காக மற்றவர்களின் உதவியை கூட பெற முடியாத நிலையில் தத்திளித்து வருகின்றனர். மேலும் சென்னையின் பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனிடையே சென்னை மாநகராட்சி சார்பில் மீட்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மக்களின் பசியை போக்கும் வகையில் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ள மக்களுக்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள் உணவுகளை வழங்கி வருகின்றனர். இதனிடையே சென்னையை அச்சுறுத்திய இந்த கனமழையின் காரணமாக சென்னையின் மையப்பகுதிகளில் ஒன்றாக தேனாம்பேட்டை பகுதியில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. 2-வது நாளாக குடியிறுப்பு பகுதியில் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே தேனாம்பபேட்டை வீனஸ் காலணியில், சாலைகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளதால், மக்கள் இந்த தண்ணீரை கடந்து தான் வெளியில் செல்ல வேண்டிய சூழல் இருந்து வருகிறது. அதேபோல் தேனாம்பேட்டைக்கு அருகில் உள்ள ஆழ்வார்பேட்டையில் தான் நடிகர் கமல்ஹாசன், பழம்பெரும் நடிகை லதா மற்றும் இயக்குனர் மணிரத்னம் ஆகியோர்களின் வீடு இருக்கிறது. இவர்கள் யாருமே தற்போது வெளியில் வரவில்லை.
2015-ம் ஆண்டில் கூட இப்படி தண்ணீர் தேங்கியதில்லை. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கூட வீட்டை விட்டு வெளியில் வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் எப்போது வடியும் எப்போது நாங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவோம் என்று தெரியவில்லை என்பதே தேனாம்பேட்டை மக்களின் கருத்தாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“