மாநில அரசுகளிடம் மத்திய அரசு காட்டும் பாகுபாடு, மனிதனின் ஆக்ஸிஜனை நிறுத்துவதற்கு சமம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்தியாவில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த பிப்ரவரி 1-ந் தேதி நாடானுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தமிழகம் கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், வரி பகிர்வு விவகாரத்தில், தென்னிந்திய மாநிலங்களுக்கு மத்திய அரசு அநீதி இழைப்பதாக தமிழ்நாடு கர்நாடக கேரளா ஆகிய மாநிலங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில், வரி பகிர்வில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசை கண்டித்தும், மாநிலத்திற்கு உரிய நிதியுதவி வழங்க வேண்டும் என்று கூறியும் கர்நாடக முதல்வர் சித்தாராமையா, அம்மாநில அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் என பலரும் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தற்போது கேரளா முதல்வர் பினராயி விஜயன், தனது அமைச்சர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கேரளா அரசின் இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு, டெல்லி அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், திமுக அமைச்சர் பி.டி.ஆர் தியாகராஜன் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். இந்த போராட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதி பகிர்வு விவகாரத்தில் தங்கள் மாநிலத்திற்கு பாரபட்சம் காட்டுவதாக கூறி மத்திய அரசுக்கு எதிராக அனைத்து மாநிலங்களும் போராட்டம் நடந்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலைக்கு காரணம் மத்திய பாஜக அரசு தான். இதற்கு அவர்கள் பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை. மாநிலங்களின் நிதி உரிமையை பறிப்பது ஆக்ஸிஜனை நிறுத்துவதற்கு சமம். அதைத்தான் பாஜக அரசு செய்து வருகிறது. எதோ எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் தான் இது நடக்கிறது என்று மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டும் காணாமல் இருக்கும் பாஜக முதல்வர்களுக்கு நாளை உங்கள் மாநிலத்திற்கும் இதே நிலை தான் என்பதை எச்சரிக்கையாக தெரிவிக்கிறேன்.
கூட்டாட்சி தத்துவத்தை பேணி காப்பதற்காக இந்திய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. முந்தைய பிரதமர்கள் மாநில அரசுகளை மதித்தனர். ஆனால் பிரதமர் மோடி அப்படி இல்லை. அனைவரும் ஒன்றாக இணைந்து பாசிச பாஜக அரசை வெளியேற்றுவோம் என்று பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“