தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சேம்ப்ஸ். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ள யோகஸ்ரீ, தர்ஷினி, வைதேகி, அபிருத் என பல போட்டியாளர்கள் சாமானிய குடும்பத்தில் இருந்து தேர்வாகி மற்ற போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்து பாடி பார்வையாளர்களை வியக்க வைத்து வருகின்றனர். ஏற்கனவே கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் யோகஸ்ரீயை பாராட்டி சமூக வளையதள பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.
அதே போல் தர்ஷினி தனது சொந்த ஊரான அம்மணம்பாக்கம் கிராமத்தில் பேருந்து வசதி இல்லை, படிக்க கூட 5 கிலோ மீட்டர் நடந்து தான் செல்ல வேண்டும் என்று சொல்லி இருந்ததை தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் சமீபத்தில் தர்ஷினியின் சொந்த ஊரில் கொடி அசைத்து வைத்து பேருந்து வசதியை ஏற்படுத்தி வைத்தார்.
இந்த நிகழ்வுகளை தொடர்ந்து தற்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் போட்டியாளர்களான யோகஸ்ரீ மற்றும் தர்ஷினியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பின் போது ஜீ தொலைக்காட்சியின் சௌத் கிளஸ்டர் ஹெட் சிஜு பிரபாகரன், நான் பிக்ஷன் ஹெட் பூங்குன்றன் ஆகியோர் உடன் இருந்தனர். இது குறித்த புகைப்படம் சமூக வளையதளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“