/indian-express-tamil/media/media_files/C87f4juGF2kfCO8WEsdU.jpg)
சித்தா படத்திற்கு திருச்சி சிவா பாராட்டு
நாட்டில் சிறார் மீதான பாலியல் வன்முறை, அதனால் குடும்பங்களிலும் சமூகத்திலும் ஏற்படுத்தும் தாக்கங்கள், அதைக் கையாள்வதற்குத் தேவையான புரிதல், சிறார் பாலியல் வன்முறையை எப்படித் தடுப்பது, அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி உதவுவது என்பது குறித்த புரிதலை மேம்படுத்திக் கொள்ள சமூக விழிப்புணர்வுடன் எடுக்கப்பட்டிருக்கும் "சித்தா" படத்திற்கு பிரபலங்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்திருக்கின்றது.
இதுகுறித்து திருச்சி சிவா எம்.பி தமது சமூக ஊடகங்களில் தூக்கம் தொலைந்து போனதே! என பதிவிட்டிருக்கின்றார். இது குறத்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
இரண்டாவது ஆட்டம் “சித்தா” பார்த்துவிட்டு தாமதமாக உறங்கி விடியற்காலையில் படத்தின் நினைப்பு வந்து மீண்டும் தூக்கம் வராமல் எழுதியது இது! மனம் கவர்ந்த படங்களைப் பார்க்க நேர்ந்த போதெல்லாம் அதோடு தொடர்புடையவர்களை பாராட்டி எழுதியிருக்கிறேன். இது சமுதாயத்தில் படர்ந்து கொண்டிருக்கும் ஒரு மாபாதகத்தை பார்ப்பவர்கள் மனம் பதறப் பதற உணர்த்தியிருக்கும் படம் என்பதால்!
தூக்கம் தொலைவதற்கு காரணமான இந்த சினிமாவை மீண்டும் பார்க்க துணிவும் இல்லை. அவசியமும் இல்லை. ஆனால் மற்றவர்கள் ஒரு முறையாவது இந்தப் படத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. சித்தார்த் என்ற ஒரேயொரு அறிமுகமான நடிகரைத் தவிர அனைவரும் புதுமுகங்கள். ஒன்று கூட சினிமா முகம் கிடையாது. வழக்கமான அதற்கான தோற்றமோ, பெரிய ஒப்பனையோ கூட இல்லாமல் நடிப்பினால் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறார்கள்.
சுத்திகரிப்பு பணியிலிருக்கும் பெண்ணோடு கதாநாயகனுக்கு காதல் மலர்ந்து அந்த திசையில் செல்வது போல தொடங்கும் படம், முற்றிலும் வேறு திசையில் பயணித்து அப்படியே தடம் மாறி எட்டும் பத்துமான வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள், அவர்களின் பெற்றோர்களின் மிகப் பிரமாதமான நடிப்பு, என உணர்ச்சியின் உச்சத்தில் கொண்டு போய் உட்கார வைக்கும், நெஞ்சில், வயிற்றில் மின்சார அதிர்வினை ஏற்படுத்தும் காட்சிகளோடு திரைக்கதை, கதையையும் கதை மாந்தர்களையும் தத்ரூபமாக நடிக்க வைத்துள்ள இயக்குநர் சி.எஸ்.பாலச்சந்தர் மிகுந்தப் பாராட்டுக்குரியவர்.
இரண்டு காட்சிகளில் மட்டுமே வரும் ரொட்டி விற்பவர், கடைசியாக சுந்தரியை ஆட்டோவில் பயணியாக ஒரு சில நிமிடங்களே வந்து காப்பாற்றும் பெண்மணி உட்பட மனதில் நின்று விடுகிறார்கள். வில்லன் என்ற சொல்லுக்கும் மேல் ஏதாவது கொடுமையான சொல் இருந்தால் அதற்குப் பொருத்தமான பாத்திரத்தில் எந்தவிதமான் சிறப்பு லட்சணங்களும் இல்லாத ஒரு சாதாரணமான நடிக(ன்)ர் தான் என் தூக்கம் அதிகாலையில் கெடக் காரணமாக இருந்த பாவி!
பிற்பகுதியில் கதையின் முக்கியமான பாத்திரமாக மாறும் எட்டு வயது குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம் நம் வீட்டில், நமக்குத் தெரிந்தவர்கள் வீடுகளில் உள்ள பிள்ளைகளின் நினைப்பு. “ சித்தா” என்று அழைக்கும் அந்த உறவும் குரலும் பலருக்கும் அறிமுகமான ஒன்றாக நிச்சயம் இருக்கும். பல காட்சிகளில் பக்கத்தில் குழந்தைகள் இருந்தால், தூங்கி கொண்டிருந்தால் கூட பதைபதைப்போடு கைகள் நம்மையறியாமல் இழுத்து நெருக்கமாக அணைத்துக் கொள்ளும்.
“சுந்தரி” கடத்தல்காரனின் பிடியில் சிக்கிக் கொண்டு, குழந்தைத் தனம் மாறாமல் லாலிபாப்பும், மீன் ரொட்டியும் தின்று கொண்டு அவன் கொடூரத்திற்கும் இரையாகி, “மூட்டையில் இருக்கும் ரெண்டு பாம்பு கொத்தி தின்னுடும் “ என்று கத்தும்போது வயிறெல்லாம் ஒட்டிக் கொண்டு போகிறது. என்ன ஓர் அற்புதமான நடிப்பு. இந்த ஆண்டின் சிறந்த குழந்தை நட்சத்திரம் என பாராட்டப்பட வேண்டிய திறமை.
குழந்தை “ பொன்னி” பாதிப்புக்கு முன் குழந்தைத்தனமாகவும் பாதிப்புக்குப் பின் அதிர்ச்சியும் கோபமும் கலந்த வேறுவிதமான முகக் குறிப்புடன் அதிகம் பேசாமலே நிறைய புரிய வைக்கிறது. குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் ஆபாசப் படங்கள் பெருகி, பெரும் பாதகங்களுக்கு காரணமாக இணையதளங்களில் வளைய வரும் வக்கிரங்களை கட்டுப்படுத்திட , தடுத்திட அரசாங்கத்திற்கு ஆலோசனைகள் வழங்கிட இந்திய நாட்டின் மேனாள் குடியரசு துணைத்தலைவர் திரு.வெங்கையா நாயுடு மேனாள் ஒன்றிய அமைச்சர் திரு.ஜெயராம் ரமேஷ் தலைமையில்அமைத்த சிறப்புக் குழுவில் நானும் ஓர் உறுப்பினராக இருந்து அந்தக் குழு அரிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்கி அதில் சில நடைமுறைப் படுத்தப்பட்டுமிருக்கின்றன. ஆனால் சமுதாயத்தில் அந்தப் பாதகம் குறைந்தபாடில்லை.
இன்றைய உலகத்தில், சிதைந்து போயிருக்கும் சமுதாயத்தில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் எதிர்மறையான ஒரு பக்க தாக்கத்தால் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பள்ளிக் கூடத்திற்கோ, பக்கத்து வீட்டிற்கோ போன பிள்ளை பத்திரமாக வீடு திரும்பும் வரை ஒவ்வொரு நாளும் பதைபதைப்புத்தான். மற்ற சட்டங்களைப் போலவே “ போக்சோ” வும் போதிய பலனளிக்கவில்லை. பெரும்பாலான போலீசார் பொறுப்புடனும், பொறுமையுடனும் இதுபோன்றவற்றை அணுக வேண்டும் என்பதைப் பற்றியும் இந்தப் படம் நயமாக சொல்கிறது.
சுந்தரியின் தாய், பொன்னியின் தந்தை, கதாநாயகனின் நண்பனாக வரும் போலீஸ், பார்க்கும் வேலையை கௌரவக்குறைவாக கருதாத , சுயமரியாதை குன்றாத, காதலனின் துயரத்தில் பங்கு கொள்கிற பெண்ணாக புதுமுக நாயகி, முதலில் அப்பாவியாக காவி உடை, தாடி, மீசையுடன், பின்னர் பேண்ட், சட்டை மொட்டைத்தலையுடன் வரும் “கொடூரன்” வரை அனைவருமே பாராட்டிற்குரிய நடிப்பு! “பாய்ஸ்” படத்தில் விடலைப் பையனாய் அறிமுகமாகி ஒவ்வொரு படத்திலும் மெருகேறி இன்று நடிப்பில் உச்சம் தொட்டிருக்கிறார் அறிவில் சிறந்த தம்பி சித்தார்த்!
இயக்குநரை ஆரத்தழுவி இதோ தமிழ்த் திரையுலகிற்கு இன்னொரு பாலச்சந்தர் என நெற்றியில் முத்தமிட வேண்டும். கொஞ்சம் சிரமம்தான். ஆனால் யதார்த்தம் என்பதால், எச்சரிக்கை உணர்வு எல்லோர்க்கும் தேவை என்பதால், பெற்றோர்கள் அவசியம் பிள்ளைகளோடு சென்று பார்த்து வந்தால் படம் எடுத்தவர்களுக்கும், உயிரைக் கொடுத்து நடித்தவர்களுக்கும் (குறிப்பாக அந்தக் குழந்தை தேவதைகள்) நன்றி சொல்லி, அங்கீகரித்து பாராட்டியதாக அமையும்!
இவ்வாறு இலக்கியவாதியும், திமுக கட்சியின் சிறந்த மேடைப் பேச்சாளரும், திருச்சி சிவா எம்.பி. தனது தூக்கம் துலைந்து போனதாக சித்தா படம் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டிருக்கின்றார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.