பட்டுக்கு பெயர் போன திருபுவனம் பகுதியில் பல கோடிக்கு மேல் பட்டுப் புடவைகள் தேக்கமடைந்து இருப்பதாக நெசவுப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கோட்டத்துக்கு உட்பட்ட அய்யம்பேட்டை, அம்மாபேட்டை, கும்பகோணம், தாராசுரம், திருபுவனம் உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட பட்டு கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இப்பகுதியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருபுவனத்தில் அண்மையில் நடைபெற்ற பட்டு கூட்டுறவு சங்கத்தின் பொதுப்பேரவைக் கூட்டத்தில், ரூ.100 கோடிக்கும் மேல் பட்டுச் சேலைகள் தேக்கம் அடைந்துள்ளது குறித்து நிர்வாகிகள் சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர். இதேபோல, மற்ற பட்டு கூட்டுறவு சங்கங்களிலும் பட்டுச் சேலைகள் தேக்கம் அடைந்துள்ளது தெரியவந்துள்ளதால், அவற்றுக்கு கூடுதல் தள்ளுபடி அறிவிக்க வேண்டும், இல்லாவிட்டால் சங்கங்கள் விரைவில் நலிவடையும் எனவும் நெசவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கைத்தறி பட்டு நெசவுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறுகையில், நெசவுத் தொழிலுக்கு பிரசித்தி பெற்ற திருபுவனத்தில் திகோ, திருவள்ளுவர், சோழன், காமராஜர், கும்பகோணத்தில் அறிஞர் அண்ணா, அய்யம்பேட்டையில் வஉசி மற்றும் தாராசுரம், அம்மாபேட்டை ஆகிய கைத்தறி பட்டு கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன.
இந்த சங்கங்களில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அந்த சங்கத்தில் இருந்து மூலப் பொருட்களை வாங்கி வந்து, சேலைகளை நெய்து, பின்னர், அந்த சங்கத்துக்கே வழங்குவார்கள். இதற்காக 1 புடவைக்கு குறைந்தபட்சம் ரூ. 4 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் வரை கூலியாகப் பெறுகிறார்கள். இதில் திகோ சங்கத்தில் ரூ.100 கோடி, திருவள்ளுவர் சங்கத்தில் ரூ.25 கோடி, சோழன் சங்கத்தில் ரூ.50 கோடி என பல்வேறு சங்கங்களில் மொத்தம் ரூ.300 கோடிக்கு மேல் பட்டுப் புடவைகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன.
இவை பல மாதங்களாகத் தேங்கி இருப்பதால், தரம் குறைய வாய்ப்புள்ளது. இதனால், நிர்ணயித்த விலைக்கு விற்பனை செய்ய முடியாமல், நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. தமிழக அரசு ஆண்டுக்கு 9 மாதங்களுக்கு ஒரு புடவைக்கு ரூ.200, மீதமுள்ள 3 மாதங்களுக்கு ஒரு புடவைக்கு ரூ.300 என மிகக் குறைவாக தள்ளுபடி வழங்குவதால்தான், புடவைகள் தேங்கியுள்ளன.
எனவே, அனைத்து பட்டுச் சேலைகளுக்கும் 10 சதவீதம் கூடுதலாக தள்ளுபடி அறிவித்தால்தான், பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்குவார்கள். இல்லாவிட்டால் இந்த சங்கங்கள் நலிவடைந்து, நெசவாளர்களுக்கு மூலப் பொருட்கள் வழங்க முடியாதநிலை ஏற்படும். இதனால், நெசவாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“