திரைப்படங்களுக்கு எதிர்மறையான விமர்சனங்களை வைக்கும் யூ டியூப் சேனல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் "திரையரங்கு உரிமையாளர்கள் தங்கள் வளாகங்களில் ரசிகர்களிடம் பேட்டி எடுக்க யூடியூப் சேனல்களை அனுமதிக்க கூடாது என்றும் கூறியுள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால், அந்த படத்தின் முதல் காட்சி முடியும் முன்பே சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் வந்துவிடுகிறது. குறிப்பாக பெரிய மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றால், உடனடியாக விமர்சனம் செய்ய யூடியூப் சேனல்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக ரசிகர் ஷோ படம் பார்த்துவிட்டு வெளியில் வரும் பார்வையாளர்களிடம் படம் எப்படி உள்ளது என்று தியேட்டர் வாசலிலேயே பேட்டி எடுத்து வீடியோ வெளியிடுகின்றனர்.
இந்த முதல் விமர்சனம் சரியாக இருந்தால், அந்த படம் அடுத்தடுத்த நாட்களில், பெரிய வசூல் வேட்டை நடத்தி வெற்றிப்படமாக மாறும். அதே சமயம், முதல் விமர்சனம் படத்திற்கு எதிர்மறையாக இருந்தால், அந்த படம் முதல் நாளே தோல்விப்படம் என்று முத்திரை குத்தப்படும் நிலைமை உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசனின் இந்தியன் 2, ரஜினிகாந்தின் வேட்டையன் படம் பெரிய எதிர்மறை விமர்சனங்களை பெற்றிருந்தது.
அந்த பட்டியலில் சமீபத்தில் புதிதாக இணைந்த படம் தான் சூர்யாவின் கங்குவா. சூர்யாவின் திரை வாழ்க்கையில் பெரிய பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் வெளியாகும் முன்பே, ரூ2000 கோடி வசூல் செய்யும் என்று பழக்குழுவினர் பேசியதை வைத்து, படம் வெளியானவுடன், எதிர்மறை விமர்சனங்களால் ரசிகர்கள் பலரும் படக்குழுவினரை ட்ரோல் செய்து வருகின்றனர். படத்திற்கு ஆதரவாக பிரபலங்கள் பலரும் பதிவுகள் வெளியிட்டாலும், நெட்டிசன்கள் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
இதனிடையே தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, “திரைப்படங்களின் நிறை குறைகளை விமர்சிக்க அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால் அது திரைப்படத்தை பற்றி மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், கதாநாயகன் மீது தனிமனித தாக்குதல்கள் மற்றும் அவர்கள் மீது இருக்கும் வன்மத்தை பொதுவெளியில் கக்க ஒரு கருவியாக, திரைப்பட விமர்சனத்தை சில ஊடகங்கள் சமீப காலங்களில் பயன்படுத்தி வருவதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
ஒரு திரைப்படத்தை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும். விமர்சகர்கள் தங்களின் கருத்துகளை அனைவரின் கருத்தாக மக்களிடம் கொண்டு செல்வது தவிர்க்கப்பட வேண்டும். ஒரு படம் ஏமாற்றி விட்டதாக இந்தளவுக்கு கொந்தளித்து பேசி வரும் பலர் (பார்வையாளர்கள் உட்பட), நம்மைச் சுற்றி நடக்கும் எத்தனையோ அநீதிகளை, அத்துமீறல்களை, மோசடிகளை கண்டும் காணாமல் கடப்பதையும் நாம் பார்த்து வருகிறோம். ஒரு திரைப்படத்தை மூன்று மணி நேரம் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பார்க்காமல், அது ஏதோ மொத்த சமுதாயத்திற்கும் அநீதி விளைவித்தது போல பலர் பேசி வருவது அநீதியான செயல் என்று கருதுகிறோம்.
விமர்சகர்களுக்கு திரைப்படங்களை விமர்சனம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது. ஆனால் தனிப்பட்ட காழ்புணர்ச்சியின் காரணமாக ஒரு திரைப்படத்தை பற்றிய வெறுப்பை ஊடங்களில் விதைக்க கூடாது என்பதை அனைத்து ஊடகவியலாளர்களும் மனதில் வைத்து திரைப்பட விமர்சனங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
திரையரங்குகளுக்கு வெளியே, திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன், பார்வையாளர்களின் கருத்துக்களை பதிவு செய்து வரும் பல YouTube Channel-கள், எல்லை மீறி கருத்துக்களை சொல்லும் பார்வையாளர்களை ஊக்குவித்து, அதை தொடர்ந்து வெளியிட்டு, அதிக அளவில் அத்தகைய கருத்துக்களை, ஏதோ அனைத்து பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உலக அளவில் அதை எடுத்து செல்வது மிகவும் கண்டிக்கதக்கது. சமீபத்தில், “கங்குவா” திரைப்படத்திற்கு விமர்சனம் என்ற பெயரில் ஒரு பெரியவர், ஒரு திரையரங்குக்கு வெளியே தனிமனித தாக்குதல்களும், வன்மத்தை கக்கியதும், அனைவரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அத்தைகைய கருத்துக்களை பதிவு செய்து, மக்களிடம் அதை பெரிய அளவில் கொண்டு சென்ற YouTube Channel-களை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
திரையரங்குகளுக்கு வெளியே இவ்வாறு பார்வையாளர்களின் கருத்தை கேட்டு YouTube Channel-களில் பதிவு செய்யும் முறை வந்த பின், பல பார்வையாளர்கள் (Audience) இத்தகைய வீடியோக்கள் மூலம் பிரபலம் அடைய தன்னை திரைத்துறை மேதாவியாக நினைத்து பேசி வருவதும், ஏதோ அத்திரைப்படம், அவரின் மொத்த நிம்மதியையே குலைத்து விட்டது போல பேசி பிரபலம் அடைய முயற்சிக்கிறார்கள். அவ்வாறு அவர்கள் பேசுவது எத்தகைய பாதிப்பை அத்திரைப்படத்திற்கு ஏற்படுத்தும் என்பதை நன்கு உணர்ந்தும் பல YouTube Channel-கள் அவைகளை ஊக்குவித்து வருகின்றன. எந்தவித எடிட்டிங்கும் செய்யமால் அத்தகைய கருத்துக்களை உடனுக்குடன் வெளியிட்டு பிரபலப்படுத்துகின்றன.
திரைப்பட விமர்சனம் என்கிற பெயரில் தனிமனித தாக்குதல் மற்றும் வன்மத்தை விதைத்தல் - #TFAPA கண்டனம்@tfapatn @offBharathiraja @TGThyagarajan @TSivaAmma @Dhananjayang @prabhu_sr #SSLalitKumar @sureshkamatchi pic.twitter.com/rAnYUoH9t7
— Nikil Murukan (@onlynikil) November 20, 2024
தமிழ் நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், இன்று அறிவித்தது போல, திரையரங்கு வளாகம் மட்டுமில்ல, அதற்கு அருகிலும், எந்த YouTube Channel-களும் பார்வையாளர்கள்/ரசிகர்களிடம் இனிமேல் புதிய திரைப்படங்களை பற்றி பேட்டி எடுக்க தமிழ் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் அனுமதிக்க கூடாது. Public Review/Public Talk என்கிற பெயரில் பார்வையாளர்களை திரைப்படங்கள் மீதும் அதில் சம்பந்தபட்டவர்கள் மீதும் வன்மத்தை கக்கும் மனிதர்களாக மாற்றும் இந்த போக்கை உடனே தடை செய்யுமாறு அனைத்து திரையரங்க உரிமையாளர்களையும் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
இந்த 2024 வருடத்தில் இந்தியன் 2, வேட்டையன் மற்றும் கங்குவா திரைப்படங்களுக்கு Public Review/Talk மூலம் பெருமளவில் பாதிப்பை YouTube Channel-கள் ஏற்படுத்தியுள்ளன. அவைகளை இனிமேல் ஊக்குவிக்காமல், திரைத்துறையை சார்ந்த அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த முறையை தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதன் முதல் முயற்சியாக, அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியை தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் எந்த YouTube Channel-களும் எடுக்க தடை செய்து, இந்த FDFS Public Review/Talk நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.