இந்த தீபாவளி களைக்கட்ட போவது உறுதி.. சர்காருக்கு அடித்தது லக்!

இந்த தீபாவளி சர்கார் தீபாவளி ஆகுமா?

தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் தீபாவளி சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

திரையரங்குகளில் கூடுதல் காட்சி:

தீபாவளி நாள் மட்டுமன்றி, கூடுதலாக சில நாட்களிலும் கூடுதல் காட்சிகளை ஒளிபரப்புவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று தீபாவளி அன்றும் அதற்கு அடுத்த 7, 8 மற்றும் 9 தேதிகளிலும் திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் ஒளிபரப்ப தமிழக அரசு அனுமதித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில், தீபாவளி நாள் மட்டுமின்றி, அதற்கடுத்த 3 நாட்களுக்கும் கூடுதலாக ஒரு காட்சி ஒளிபரப்பு செய்யலாம் என்றும், சிறப்பு காட்சிகள் குறித்து உரிய அரசு அதிகாரிகளிடம் தெரியப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு விடுமுறை நாட்களில் கூடுதல் காட்சி திரையிட ஏற்கனவே சட்டத்தில் வழிவகை உள்ளதால், தீபாவளி நாளில் ஏற்கனவே கூடுதலாக ஒரு காட்சி திரையிட அனுமதி உண்டு.தற்போது அதற்கு அடுத்து வரும் மூன்று நாட்களிலும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது செய்தி திரைப்பட விநியோகஸ்தர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தீபாவளி அன்று பெரும்பாலான திரையரங்குகள் ஹவுஸ்புல் காட்சிகளாகவே இருக்கும்.  பலர் படத்தை முதல் நாள் பார்க்கவில்லை என்று புலம்புவார்கள். குறிப்பாக ரசிகர்கள். இவை எல்லாவற்றையும் சரிசெய்யும் விதமாக,தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்றும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

சர்கார் தீபாவளி:

இந்த தீபாவளிக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும், விஜய்யின் சர்கார் திரைப்படம் திரைக்கு வருகிறது. ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரில் தொடங்கி டீசர், இசை வெளியீடு என அதகளப்படுத்திய சர்கார் படக்குழுவுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக விஜய் படம், அதும் தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு நாட்களில் வெளியாகும் போது அதன் மீதான எதிர்ப்பார்ப்பு வழக்கத்தை விட சற்று அதிகமாகவே இருக்கும். அதே போல் இம்முறை சர்காருக்கு போட்டியாக ஒரு திரைப்படம் மட்டுமே தீபாவளிக்கு வெளியாகிறது.

இந்த நேரத்தில், கூடுதல் சிறப்பு காட்சிகள் ஒதுக்கப்பட்டிருப்பது விஜய் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சர்கார் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனையை படைக்குமா? இந்த தீபாவளி சர்கார் தீபாவளி ஆகுமா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close