அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள விடா முயற்சி திரைப்படம் நாளை (பிப்ரவரி 6) வெளியாக உள்ள நிலையில், படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் அஜித்குமார், கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் துணிவு என்ற வெற்றிப்படத்தை கொடுத்தார். அதன்பிறகு இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி என்ற படத்தில் நடிக்க தொடங்கினார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது.
அஜித்துடன், அர்ஜூன், த்ரிஷா, ஆரவ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்காக காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், விடா முயற்சி படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த சமயத்தில் அஜித், சமீபத்தில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில். குட் பேட் அக்லி என்ற படத்தில் கமிட் ஆகி நடித்து முடித்துள்ளார். .
குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இடையில் விடா முயற்சி படத்தை கையில் எடுத்த லைகா நிறுவனம் தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த படம், தீபாவளி தினத்தில் வெளியிட லைகா நிறுவனம் முயற்சித்து வருவதாக தகவல் வெளியானது. தவிர்க்க முடியாத சில காரணங்களால், தீபாவளி தினத்தில் படம் வெளியாகவில்லை என்று கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விடா முயற்சி படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான டீசரும் வெளியிடப்பட்டது. டீசரின் முடிவில், 2025 பொங்கல் தினத்தில் படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விடா முயற்சி பொங்கல் ரேசில் இருந்து விலகியது. இதனால் விடா முயற்சி வெளியாகுமா? எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுந்த நிலையில், இறுதியாக பிப்ரவரி 6-ந் தேதி வெளியாகும் என்ற அறிவிப்புடன் படத்தின் டிரெய்லர், வெளியாகியுள்ளது.
இந்த டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்திருந்தது. எந்த பண்டிகை நாளும் இல்லாத சாதாரண நாளில் வெளியாகும் விடா முயற்சி படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாளை (பிப்ரவரி 6) ஒருநாள் மட்டும் விடா முயற்சி படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்கள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, பிப்ரவரி 6-ந் தேதி ஒரு நாள் மட்டும் காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.