விஜய் நடிப்பில் தயாராகியுள்ள லியோ படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசு லியோ படத்தின் சிறப்பு காட்சி திரையிட அனுமதி அளித்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜூடன் 2-வது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் லியோ. த்ரிஷா,சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம்மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், லியோ படம் வரும் அக்டோபர் 19-ந் தேதி பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இதனிடையே படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்படுமாக என்பது குறித்து கேள்வி எழுந்தது.
தமிழகத்தில் தற்போது படங்களுக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. சமீபத்தில் வெளியான உதயநிதியின் மாமன்னன், ரஜினிகாந்தின் ஜெயிலர் உள்ளிட்ட படங்களுக்கு கூட சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதில் ஜெயிலர் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லாததது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் லியோ படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது.
அதற்கு ஏற்றார்போல் லியோ படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என்றும், தமிழகத்தில் லியோ படம் காலை 10 மணிக்கு தான் வெளியாகும் என்றும் கூறப்பட்ட நிலையில், சிறப்பு காட்சிக்காக அக்டோபர் 18-ந் தேதியே மாலை சிறப்பு காட்சி திரையிடப்படும் என்றும் கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்த நிலையில், தற்போது லியோ படத்திற்கு தமிழக அரசு சிறப்பு காட்சி அனுமதி அளித்துள்ளது.
அதன்படி அக்டோபர் 19-ந் தேதி வெளியாக உள்ள லியோ திரைப்படத்திற்கு காலை 4 மணி மற்றும் காலை 7 மணி காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அக்டோபர் 19 முதல் 24ம் தேதி வரை 5 நாட்கள் வரை தினரி 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசின் இந்த அனுமதி விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“