தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் வரும் ஜூலை 26-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
Advertisment
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனா, தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர் என பன்முக திறமை கொண்டவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், தொடர்ந்து, பா.பாண்டி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திய தனுஷ் அடுத்ததாக ராயன் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். அவரின் 50-வது படமான இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
தனுஷூடன், வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், அபர்னா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சுமார் 100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படம் ஜூலை 26-ந் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படத்தின் டிரெய்லர் ஜூலை 16-ந் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இதனிடையே நாளை மறுநாள் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக உள்ள ராயன் படத்திற்கு சிறப்பு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி நாளை மறுநாள் (ஜூலை 26) காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட உள்ள நிலையில், நள்ளிரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“