New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/18/gv1pKkYbpbk6z6Lk1SpK.jpg)
கமல்ஹாசன் - சிம்பு - த்ரிஷா கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைப் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது,
கமல்ஹாசன் – சிம்பு நடிப்பில் மணிரத்னம் இயக்கியுள்ள தக் லைப் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் சிறப்பு காட்சிக்கு ஒருநாள் மட்டும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கமல்ஹாசன், 37 ஆண்டுகளுக்கு பிறகு, இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்துள்ள படம் தக் லைப். 1987-ம் ஆண்டு வெளியான நாயகன் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ள இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் சிம்பு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நிலையில், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
தெனாலி படத்திற்கு பிறகு, ஏ.ஆர்.ரஹ்மான் கமல்ஹாசன் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், மணிரத்னம் இயக்கத்தில் 19-வது படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின், பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், வரும் ஜூன் 5-ந் தேதி தக் லைப் படம் வெளியாக உள்ளது. படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் கர்நாடகாவில், நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில், கமல்ஹாசன் பேசியது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கன்னடம் தமிழில் இருந்து பிரிந்த மொழி என்று கமல்ஹாசன் சொல்ல, அதற்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்புகளை எழுப்பி தக் லைப் படம் கர்நாடகாவில் வெளியாகாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தக் லைப் படத்திற்காக ப்ரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மறுத்த்தால், கர்நாடகாவில் தக் லைப் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், திட்டமிட்டபடி, கர்நாடகம் தவிர உலகம் முழுவதும் தக் லைப் திரைப்படம் நாளை (ஜூன் 5) வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி தக் லைப் படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தமிழகத்தில் திரையிடப்பட உள்ளது. அதேபோல் அதிகாலை 2 மணி வரை 5 காட்சிகள் திரையிட நாளை ஒருநாள் மட்டும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு படக்குழுவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.