தளபதி விஜய் நடித்துள்ள லியோ படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி அளித்திருந்தாலும் 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் திரைத்துறையில் அரசியல் தலையீடு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு லியோ படம் நாளை மறுநாள் (அக் 19) வெளியாக உள்ளது.
இதனிடையே படத்திற்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசு முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் நள்ளிரவு 1.30 மணி வரை காட்சிகள் திரையிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ரசிகர்கள் 4 மணி காட்சிகளை திரையிட வேண்டும் என்று விரும்புவதால், 4 மணி காட்சிக்கு அனுமதி கேட்டு தயாரிப்பு நிறுசவனம் மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி 4 மணிக்கு காட்சிக்கு அனுமதி இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் 7 மணிக்கு முதல் காட்சி திரையிட அனுமதி கோரி தமிழக அரசிடம் கோரிக்கை மனு கொடுக்கவும், இந்த மனு மீதாக முடிவை நாளை மதியத்திற்குள் அரசு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டுள்ளார். இதனால் லியோ படத்திற்கு 4 மணி காட்சி கிடைக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ள நிலையில், திரைத்துறையில் அரசியல் தலையீடு உள்ளது, விஜய் படத்திற்கு எதிராக சதி நடக்கிறது என்று விஜய் ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசியுள்ள சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, லியோ படத்திற்கு தினமும் 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் தினமும் 6 காட்சிகள் திரையிடவும் அனுமதி அளிக்கப்படும். நீதிமன்றம் உத்தரவிட்டால் லியோ படத்திற்கு காலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படும். திரைத்துறையில் அரசின் தலையீடு இல்லை. திமுக அரசு திரைத்துறை ஊக்கப்படுத்தி முன்னேற்றத்தை கொண்டுவர முயற்சி செய்கிறது.
சிறிய மற்றும் பொருளாதாரத்தில் மெலிந்த தயாரிப்பாளர்களின் படங்களை வெளியிடுகிறோம். சினிமாவிற்கு தடை போட்டு திரையுலகினருடன் மோதல் போக்கை மேற்கொள்ள மாட்டோம். திமுக ஆட்சியில் திரைத்துறை செழிப்பாக இருக்கிறது. எங்களின் நட்பு உலகமான திரையுலகில் அரசியல் தலையீடு இருக்காது. திரையுலகின் செழுமையான வளர்ச்சிக்கு திமுக அரசு தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“