நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் உடல்நிலை நலமாக உள்ளது என்று தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (73), வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதற்காக விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினி, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார்
இந்தநிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு அவரது அடிவயிறுபகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறப்பட்டது. அதேபோல பரிசோதனைக்காக இதய சிகிச்சை நிபுணரிடம் அனுமதி கேட்டிருக்கும் காரணத்தால் முன்கூட்டியே அனுமதிக்கப்பட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
”ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் வீடு திரும்புவார். ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கேட்டறிந்து வருகிறேன். வெறும் வயிற்றில் வரவேண்டும் என்பதால் நேற்று இரவே மருத்துவமனைக்கு வர வைத்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்தனர்.
ரஜினிகாந்துக்கு பயப்படும் வகையில் எதுவும் இல்லை. அவருக்கு திட்டமிடப்பட்ட மருத்துவ பரிசோதனையே செய்யப்படுகிறது. பெரிய அளவிலான அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை. தமிழக மருத்துவ துறை அதிகாரிகள் அப்பல்லோ மருத்துவ அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ முறைகளை அறிந்து வருகின்றனர்,” என்று கூறினார்.
இதற்கிடையே ரஜினிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஐ.சி.யூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“