தமிழக சட்டசபையில் இன்று அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் கமலின் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக கூறியதை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது. மேலும் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் ஸ்டாலினின் மகனும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனுமான உதயநிதி ஸ்டாலின், தனது தாத்தாவின் தொகுதியான சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து திமுக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பலருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. மேலும் அப்போது உதயநிதி பல படங்களில் நடித்து வந்ததால், படங்களை முடித்தவுடன் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தகவல் வெளியானது.
அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உதயநிதி நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி என்ற படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் வெளியான கலகத்தலைவன் திரைப்படம் வித்தியாசமாக இருந்ததாக பலரின் பாராட்டுக்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது உதயநிதி இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.
கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். சமீபத்தில் உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான மாமன்னன் படத்தின் டீசர் இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதனைத் தொடர்ந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் உதயநிதி நாயகனாக நடிக்கஇருப்பதாக கமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி கமல் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் முடிவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். அமைச்சராக பொறுப்பேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி கமல் சார் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாக இருந்ததது.
ஆனால் அமைச்சர் பதவி என்ற தகவல் வெளியான உடனே அவர்தான் எனக்கு முதலில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போது கமல் சார் தயாரிக்கும் படத்தில் நடிக்கவில்லை. மாரி செல்வராஜ் இயக்கும் மாமன்னன் படமே எனது கடைசி படம் என்று குறிப்பிட்டுள்ளார். புதிதாக அமைச்சர் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.