வாழை படத்தை பாராட்டிய நீங்கள் தங்கலான் படத்தை பற்றி எதுவும் சொல்லவில்லையே என்ற கேள்விக்கு எம்.பியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தலித் அரசியலை முன்னேடுக்கும் இயக்குனர்கள் என்ற அடையாளத்தை பெற்றுள்ள இருவர் பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ். தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் பட்டியலில் முக்கிய இடத்தில் இருக்கும் இவர்கள், இயக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பும், வரவேற்பும் இருந்து வருகிறது. அதே சமயம் இவர்களின் படங்களுக்கு எதிர்ப்பும் எழுந்து வருகிறது.
இதனிடையே சமீபத்தில், பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படம் வெளியானது. விக்ரம், நாயகனாக நடித்திருந்த இந்த படம், கோலார் தங்க வயலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், விக்ரமின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. அதே சமயம், பழங்கால தமிழில் வசனங்கள் இருந்ததால், படம் சரியாக புரியவில்லை என்ற விமர்சனமும் இருந்தது.
தங்கலானுடன் போட்டிக்கு வந்த டிமான்டி காலனி படமும், இதேபோல் விமர்சனத்தில் சிக்கிக்கொண்டதால் தங்கலான் படம் வசூலில், முன்னேற்றம் கண்டது. இதனிடையே கடந்த வாரம் வெளியான மாரி செல்வராஜூவின் வாழை திரைப்படம், ரிலீஸ்க்கு முன்பே பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. சிறுவயதில் தான் சந்தித்த ஒரு கொடிய விபத்தை மையமாக வைத்து, மாரி செல்வராஜ் இந்த படத்தின் கதையை அமைந்திருந்தாக தகவல்கள் வெளியானது.
இதனிடையெ வாழை படத்தை பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், படத்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்திருந்தார். பொதுவாக பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் இயக்கும் படங்களுக்கு தனது கருத்துக்களை தெரிவிக்கும் திருமாளவளவன், வாழை படத்தை பாராட்டிய நிலையில், பா.ரஞ்சித்தின் தங்கலான் குறித்து எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார். இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்கப்பட்டுள்ளது.
இதற்கு பதில் அளித்த திருமாவளவன், ஒரு படத்தை பார்த்த பிறகுதான் பாராட்ட முடியும். பார்த்து முடித்தவுடன் எனது பாராட்டை தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார். திருமாவளவனின் இந்த கருத்து சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“