ராமநாதபுரத்தில் கிங்டம் திரைப்படம் திரையிட நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கு முன்னர் முற்றுகை போராட்டம், நடத்திய நிலையில், போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் தென்மாவட்டமான, ராமநாதபுரம் நகர் பகுதியில் அமைந்துள்ள ஜெகன் திரையரங்கில் வெளியாகியுள்ள, கிங்டம் திரைப்படத்தில் இலங்கை தமிழர்களை குற்றப்பரம்பரை போல சித்தரிக்கப்பட்டு இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் திரையரங்கை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அந்த பகுதிக்கு வந்த காவல்துறையினர், அவர்களை கைது செய்ய முயன்ற போது போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா நடிப்பில் 'கிங்டம்' என்ற திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் இலங்கை தமிழர்களை குற்றப்பரம்பரை போல, மிகத் தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சியமைப்புகள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியளிப்பதாக நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனத்தை அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இலங்கை தமிழர்களை குற்றப்பரம்பரை போல சித்தரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரத்தில் கிங்டம் திரைப்படம் வெளியாகியுள்ள ஜெகன் திரையரங்கை நாம் தமிழர் கட்சி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கண்.இளங்கோ தலைமையில் அக்கட்சியினர், 50க்கும் மேற்பட்டோர், ஊர்வலமாக வந்து திரையரங்கு வாயிலில் கண்டன கோஷங்களை எழுப்பி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த கிங்டம் திரைப்படத்தின் பிளக்ஸ் பேனரை அகற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் திரையரங்கு நிர்வாகத்திடம் கேட்டனர். ஆனால் திரையரங்கு நிர்வாகம் பிளக்ஸ் பேனரை அகற்ற மறுத்ததால் அண்ணா சிலை அருகே திரையரங்கத்திற்கு முன் சாலையில் அமர்ந்து சிறிது நேரம் மறியல் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டனர்.
இதனிடையே நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் அந்த பிளக்ஸ் பேனரை கிழிக்க மேலே ஏறி செல்ல முயன்றதால் திரையரங்கு நிர்வாகம் பிளக்ஸ் பேனரை அகற்றுவதாக தெரிவித்ததையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்ய முயன்றனர்.
அவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்ற முயற்சித்த போது நாம் தமிழர் கட்சியினருக்கு போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து அனைவரையும் கைது செய்த போலீசார் தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். மேலும் இந்த போராட்டம் காரணமாக ராமநாதபுரத்தில் தியேட்டர் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், கிங்டம் படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தியேட்டர் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.