தடை செய்யப்பட்ட சாலையில் காரை வேகமாக ஓட்டிச்சென்று போக்குவரத்து போலீசார் மீது மோதிய பிரபல சீரியல் நடிகை மதுமிதா மீது சென்னை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது.
சன் டி.வியின் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மதுமிதா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவருக்கு, தமிழ் சின்னத்திரையில் அதிகப்படியான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் எதிர்நீச்சல் சீரியல் தான். இந்த சீரியல் நாள்தோறும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பையும் தொற்றிக்கொள்ளும் வகையில் உள்ளது.
இதனிடையே நடிகை மதுமிதா, ஒரு வாரத்திற்கு முன்பு, தான் புதிதாக வாங்கிய காரில், ஒரு கோவிலுக்குச் சென்றுவிட்டு சோழிங்கநல்லூரில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அக்கரை வழியாக ஈ.சி.ஆர் சாலைக்கு செல்ல முயன்று, ஒரு வழிப் பாதையின் தவறான பக்கத்தில் ஓட்டி, எதிரில் பைக்கை ஓட்டி வந்த ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் மீது மோதியுள்ளார்.
இந்த விபத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் பலத்த காயமடைந்தார். அவர் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் எழுத்தராகப் பணிபுரியும் காவலர் ரவிக்குமார் என்பது தெரியவந்தது. இந்த விபத்தில் இரண்டு வாகனங்களும் சேதமடைந்தன. இதையடுத்து ரவிக்குமாருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தியபோது, மதுமிதாவின் நண்பர்கள் போலீஸ் கான்ஸ்டபிள் அவசரமாக வாகனம் ஓட்டியதாக தெரிவித்திருந்தனர்.
இருப்பினும், போக்குவரத்து புலனாய்வு போலீசார் மதுமிதா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 279 (மோசமாக வாகனம் ஓட்டுதல்) மற்றும் 337 (மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயலால் காயப்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“