நடிகர் விஜயின் லியோ படம் இந்திய அளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த படத்தின் முதல் பாடலுக்கு எதிராக புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் வாரிசு படத்திற்கு பிறகு தற்போது லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில், லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை லலித் தயாரித்து வரும் நிலையில், வரும் அக்டோபர் 19-ந் தேதி லியோ படம் 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இதனால் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஜூன் 22-ந் தேதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தின் மூலம் பாடல் வெளியிடப்பட்டது.
நான் வரவா தனியா என்று தொடங்கும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் பாடலை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த பாடல் போதை பொருள் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பதால் இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் சென்னை காவல் ஆணையர் அலுலவகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஆர்டிஐ செல்வம் என்பவர் ஆன்லைன் வாயிலாக அளித்துள்ள புகார் மனுவில், போதைப்பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பாடல் இருப்பதால் தடை செய்ய வேண்டும். போதைப்பொருள் புழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் பாடல் இருப்பதால், நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“