தமிழக அரசின் சிறந்த திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்களுக்கு விருது வழங்கும் விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 4-ந் தேதி) மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இந்த விழாவில், சிறந்த திரைப்படங்கள், சிறந்த தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் எம்.ஜி.ஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி மாணவர்களின் சிறந்த படைப்புகளுக்காக விருதுகள் வழங்கப்பட உள்ளது
தமிழில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் சிறந்த மற்றும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற திரைப்படம் மற்றும் தொடர்களுக்கு தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2009- முதல் 2014-ம் ஆண்டு வரையிலான திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு விருது வழங்கும் விழா வரும் 4-ந் தேதி நடைபெற உள்ளது.
இதில் சிறந் திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் தலா 2 லட்சம் 2-ம் பரிசாக ஒரு லட்சம் மற்றும் 3-வது பரிசாக 75 ஆயிரமும் வழங்கப்படும். இதில் 23 தயாரிப்பாளர்களுக்கு சிறந்த படம் சிறப்பு பரிசாக ரூ 75 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதற்காக மொத்தம் 26,25,000 ரூபாய்க்காக காசோலையும், சிறந்த நடிகர் நடிகை, மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் 160 பேருக்கு தலா 5 பவுன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட உள்ளது.
அதேபோல் 2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையிலான சின்னத்திரை தொடர்களுக்கான விருது தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசாக ரூ 1 லட்சம் தலா 20 பேருக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் சிறந்த நடிகர் நடிகைகள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் 81 பேருக்கு தலா 3 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது.
அதேபோல் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி மையம் சார்பில், 2008-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான மாணவர்கள் தயாரித்த குறும்படங்கள், சிறந்த இயக்குனர்கள், சிறந்த ஒளிப்பதிவாளர்கள், சிறந்த ஒலிப்பதிவாளர்கள், சிறந்த படத்தொகுப்பாளர்கள், என 30 பேருக்கு தலா ரூ 5000- மற்றும் ஒரு பவுன் தங்கப்பதக்கமும் வழங்கப்படும் என்றறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என மொத்தம் 314 பேருக்கு விருது வழங்க ரூ 52.75 லட்சம் மதிப்பிலான காசோலை, தங்கப்பதக்கம் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட உள்ள இந்த விழாவில் தமிழகத்தின் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்று விருது பெறுபவர்களுக்கு தங்கப்பதக்கம், காசோலைகள், நினைவு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil