தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் 6 நாட்களில் ரூ500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தாலும் இந்த படத்தின் மூலம் தியேட்டர் உரிமையாளர்களுக்கு எந்த லாபமும் இல்லை என்று திருப்பூர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள லியோ பம் கடந்த வாரம் வெளியானது. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூலில் புதிய சாதனை படைத்து வருகிறது.
இதனிடையே லியோ படம் பல கோடி வசூல் செய்து வந்தாலும், அந்த படத்தினால் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சு்பபிரமணியன் தெரிவித்துள்ளார். எள்ளோ பென்ச் என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த திருப்பூர் சுப்பிரமணியன் கூறுகையில்,
லியோ படத்தால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு எவ்வித லாபமும் இல்லை மொத்த வசூலில் 80 சதவீதம் பங்கை தயாரிப்பாளர் லலித் எடுத்துக்கொண்டார். அருகில் உள்ள கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் 60 சதவீதம் பங்கு கொடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் 80 சதவீதம் பங்கு கேட்கிறார்கள். திருவனந்தபுரத்தில் (கேரளா) 60 சதவீதம், அருகில் உள்ள கன்னியாகுமரியில் 80 சதவீதம் வாங்குகிறார்கள்.
இந்த படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிட்டிருந்தால நியாயமாக இருந்திருப்பார்கள். செவன் ஸ்கிரீன் நிறுவனம் ஒரு படத்திற்கே இப்படி கேட்கிறார்கள் என்றால் தமிழ் சினிமா இவர்கள் கையில் இருந்தால் என்ன செய்வார்கள்? லியோ படத்துடன் வேறு ஒரு படம் போட்டிக்கு வெளியாகி இருந்தால் லியோ படத்திற்கு குறைவான தியேட்டர்கள் தான் கிடைத்திருக்கும். ஆனால் போட்டிக்கு படங்கள் இல்லாததால் அதிகமாக பங்கு கொடுக்கும் நிலை வந்துள்ளது.
தமிழகத்தில் பல திரையரங்கு உரிமையாளர்கள் விருப்பமே இல்லாமல் தான் லியோ படத்தை வெளியிட்டார்கள். தீபாவளி வரை இனி புதிய படங்கள் வெளியாகாது அதுவரை தியேட்டரை பூட்டி வைத்திருக்க முடியுமா? அதனால் தான் லியோ படத்தை வெளியிட்டனர். இதை பயன்படுத்திக்கொண்டு லலித் குமார் அதிகமாக பங்கு கேட்டு தியேட்டர் உரிமையாளர்களின் லாபம் கிடைக்காமல் செய்துவிட்டார் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“