தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஜெயிலர் படத்தை திரையிட ரஜினிகாந்த் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தனது 169-வது படமாக தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்துள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாணடமாக தயாரித்துள்ளது.
படத்தில் ரஜினிகாந்துடன், தமன்னா ரம்யாகிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரப், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில், அனிருத்த இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியாகி ஜெயிலர் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழா குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதனிடையே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியாக உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் ஜெயிலர் படம் பார்க்க ரசிகர்கள் திரண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குளிலும் ஜெயிலர் படத்தை வெளியிட ரஜினிகாந்த் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரோகினி பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வேண்டுகோளில், ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அனைவரும் தியேட்டருக்கு வந்து படம் பாருங்கள் என்று சூப்பர் ஸ்டார் அவர்கள் கூறியுள்ளார். அது எங்களுக்கு மகிழ்ச்சி. அதுபோல் ஜெயிலர் படத்தை அனைத்து திரையரங்கிலும் வெளியிட ஆர்வமாக உள்ளனர்.
அதனால் சூப்பர் ஸ்டார் அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கிலும் ஜெயிலர் படத்தை வெளியிட ஆவணம் செய்ய வேண்டும் எனறு கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளார். ஜெயிலர் படத்தை தமிழகம் முழுவதும் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“