Advertisment

தமிழக திரையரங்குகளின் திருவிளையாடல்கள் - உலக திரையரங்குகள்தின சிறப்புக் கட்டுரை

அரங்குகளில் முதல் வரிசைகளை ஆக்கிரமித்தவர்கள், திரையரங்குகளில் பின்வரிசைக்கு தள்ளப்பட்டனர். திரையரங்குகள் ஏற்படுத்திய மாற்றத்தின் குறியீடாக இதனை கருதலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cinima thiyetare

பாபு

Advertisment

இன்று (27 மார்ச்) உலக திரையரங்குகள்தினம். கடந்த நூறாண்டில் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியவைகளில் திரைப்படங்களும், திரையரங்குகளும் முக்கியமானவை.

இந்தியாவில் அரங்குகளில் நிகழ்த்தப்படுபவை உயர் சாதியினரின் கலைகளாகவும், திறந்தவெளியில் நிகழ்த்தப்படுபவை கீழ் சாதியினரின் கலைகளாகவும் கருதப்பட்ட காலம் இருந்தது. அரங்கில் நிகழ்த்தப்படும் கலைகளுக்குரிய மதிப்பும், கலைஞர்களுக்குரிய மரியாதையும், திறந்தவெளியில் நடத்தப்படும் கூத்து போன்ற கலைகளுக்கு இருந்ததில்லை. சினிமா அதனை மாற்றியது. திரையரங்குகள் மாற்றத்தின் களங்களாக அமைந்தன.

திரையரங்குகளில் ஆண்டவனையும், அடிமையும் ஒன்றாக அமர்ந்து திரைப்படத்தை ரசிக்க வைத்தது. அதுவரை அரங்குகளில் முதல் வரிசைகளை ஆக்கிரமித்தவர்கள், திரையரங்குகளில் பின்வரிசைக்கு தள்ளப்பட்டனர். திரையரங்குகள் ஏற்படுத்திய தலைகீழ் மாற்றத்தின் குறியீடாக இதனை கருதலாம். சமத்துவத்தை நிலைநிறுத்திய திரையரங்குகள் ஒரு நூற்றாண்டை எட்டுவதற்குள் தமது மகிமையை இழந்து, மனிதர்களிடையேயான பிளவின் பிரதிநிதிகளாக பரிணமித்துள்ளன. இன்று நகரங்களில் உள்ள மல்டிபிளக்ஸ்களில் உங்களுடன் படம் பார்ப்பவர் ஒரு டீக்கடை மாஸ்டராகவோ, பாசிமணி கோர்க்கும் நரிக்குறவராகவோ இருக்க வழியில்லை. அவர்களை நமது நவீன திரையரங்குகள் வெளித்தள்ளிவிட்டன. சமத்துவத்துக்கு உதாரணமான திரையரங்குகள் இன்று வார்க்கரீதியில் மனிதர்களை பிரித்து வைத்துள்ளன.

திரையரங்குகளின் இன்றையை நிலையையும், இன்று தமிழ் திரையுலகம் நடத்திவரும் போராட்டத்தையும் இந்தப் பின்னணியில் வைத்து ஆராய்வது முக்கியமானது.

தமிழ் திரையுலகு மொத்தமாக முடங்கியுள்ளது. இதனை வேலைநிறுத்தம் என்று கூறாமல் சீர்த்திருத்தம் என்கிறார் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால். டிஜிட்டல் சர்வீஸ் புரவைடர்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக நடத்தப்படுவதாக சொல்லப்படும் இந்தப் போராட்டத்தை முன்வைத்து பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க தயாரிப்பாளர்கள் முனைகின்றனர். அதன் ஒரு பகுதியாக இயக்குனர்கள் சங்கம், ஒளிப்பதிவாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம் என ஒவ்வொரு சங்கமாக அழைத்து பேசி பிரச்சனைகளை களைய முற்படுகின்றனர். இதில் பிரதானமாக முரண்டு பிடிப்பவை திரையரங்குகள். அவைகள் எப்போதும் திரைத்துறை வர்த்தகத்தை தங்களுக்கு தொடர்பில்லாத ஒன்றாக, தங்களின் சுயநலம் மட்டுமே பிரதானமாக பார்க்கின்றன.

திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணமாக 30 முதல் 120 ரூபாய்கள்வரை வசூலிக்கப்படுகின்றன. அதனை முறைப்படுத்தி 2017 நவம்பரில் அரசு ஆணை பிறப்பித்தது.

மாநகராட்சிகள்

மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் - 20 ரூபாய்

இரு சக்கர வாகனங்கள் - 10 ரூபாய்

நகராட்சிகள்

மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் - 15 ரூபாய்

இருசக்கர வாகனங்கள் - 7 ரூபாய்

நகர கிராம பஞ்சாயத்துகள்

மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் - 5 ரூபாய்

இருசக்கர வாகனங்கள் - 3 ரூபாய்

இந்த கட்டணம் 2017 டிசம்பர் ஒன்று முதல் அமலுக்கு வருவதாக அரசு அறிவித்தது. இத்தனை மாதங்களான பிறகும் 99 சதவீத திரையரங்குகள் இவற்றை கடைபிடிக்கவில்லை. 30 முதல் 120 ரூபாய்வரை கட்டணமாக வசூலிக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் சங்கம் இதனை முறைப்படுத்த வேண்டும் என்கிறார்கள். அபிராமி ராமநாதன் அட்வைஸ் பண்ணலாம், நிர்ப்பந்திக்க முடியாது என்கிறார்.

திரையரங்கு கேன்டீனில் தின்பண்டங்கள் வெளியேவிட நான்கு ஐந்து மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. அவற்றை குறைக்க வேண்டும் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள். திரையரங்குகள் மறுக்கின்றன.

90 சதவீத திரையரங்குகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிக கட்டணத்தை வசூலிக்கின்றன. இதில் நடக்கும் தில்லுமுல்லுகள் பலவகைப்பட்டவை.

1. ஒரிஜினல் டிக்கெட்களுக்கு பதில் முன்பதிவு டோக்கன்களையே அதிக திரையரங்குகள் வழங்குகின்றன. இதனால் டிக்கெட் விற்பனையை அவர்களின் விருப்பத்துக்கு காட்ட முடியும். உதாரணமாக 500 டிக்கெட்கள் விற்பனையானால் 300 என்றோ 100 என்றோ காட்ட முடியும். இதன் மூலம் தயாரிப்பாளர், அரசு என இரு தரப்பையும் திரையரங்குகளால் ஏமாற்ற முடியும்.

2. 90 சதவீத திரையரங்குகள் மூன்றுவிதமான கட்டணங்களுக்கு பதில் அதிபட்ச டிக்கெட் கட்டணத்தையே வசூலிக்கின்றன. பால்கனி, பர்ஸ்ட் கிளாஸ், முதல்வரிசை 10 ரூபாய் என அனைத்திற்கும் ஒரே கட்டணம். ஆனால் கணக்கு காண்பிக்கும்போது குறைந்தபட்ச டிக்கெட்கள் விற்பனையானதாக காட்ட முடியும். இந்த குளறுபடிகள் காரணமாக தயாரிப்பாளர்களுக்கு சரியான கணக்குகள் காட்டப்படுவதில்லை.

அதனால் தயாரிப்பாளர்கள் சங்கம், டிக்கெட் விற்பனையை கணினிமயப்படுத்துங்கள் என்கிறார்கள். திரையரங்குகள் ஆவேசமாக மறுக்கின்றன.

3. ஆன்லைனில் ஒரு டிக்கெட்டை முன்பதிவு செய்தால் 35 ரூபாய் பிடித்துக் கொள்கிறார்கள். ஒரே நபர் ஒரே நேரத்தில் பத்து டிக்கெட் முன்பதிவு செய்தால் 350 ரூபாய் பிடித்துக் கொள்கிறார்கள். இது கூடாது என்கிறார்கள் தயாரிப்பாளர்கள். திரையரங்குகள் அதற்கு மறுக்கின்றன.

4. முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது ஐநூறு முதல் இரண்டாயிரம்வரை ஒரு டிக்கெட்டுக்கு வசூலிக்கிறார்கள். இது கூடாது என்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம்.

5. நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவதால்தான் தயாரிப்பு செலவு எகிறி அதிக கட்டணம் வசூலிக்க வேண்டியதாகிறது என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். நீங்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் டிக்கெட்டை விற்று சரியான கணக்கு காட்டுங்கள், அப்போது ஒரு நடிகனின் உண்மையான மார்க்கெட் தெரிந்துவிடும், சம்பளம் அதுவாகவே குறையும் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

தற்போது நடந்து கொண்டிருக்கும் வேலைநிறுத்தம் க்யூப், யுஎஃப்ஓ நிறுவனங்களின் அதிக கட்டண வசூலுக்கு மட்டும் எதிரானதல்ல. திரையரங்குகளின் குளறுபடிகள் முடிவுக்குவர வேண்டும் என்பதையும் சேர்த்தே போராட்டம் நடக்கிறது. அதன் காரணமாகவே வேலைநிறுத்தத்தை எப்படியும் முறியடிப்பது என்ற நோக்கில் சில திரையரங்கு உரிமையாளர்கள் செயல்படுவதாக சந்தேகம் கிளப்புகிறார்கள்.

இக்கட்டான இந்த சூழலில் அரசு தலையிட்டு திரையரங்குகளின் குளறுபடிகளை ஓர் ஒழுங்குக்கு கொண்டு வரவேண்டியது அதன் கடமை. அரசு ஆணை பிறப்பித்தும் மதிக்காமல் அதிகளவில் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதை எப்படி அரசு பொறுத்துக் கொள்கிறது என்பது ஆச்சரியமானது. அரசு கறாராக செயல்பட வேண்டிய தருணமிது.

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment