காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாவட்ட தலைவராக செயல்பட்டு வந்த ஜவகர் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீக்கப்பட்டு புதிய மாநகர் மாவட்டத் தலைவராக திருச்சி மாநகர 39-வது வார்டு மாமன்ற உறுப்பினர் எல்.ரெக்ஸ் நியமனம் செய்யப்பட்டார். எம் பி திருநாவுக்கரசர் தன்னிச்சையாக செயல்பட்டு, மாநகர் மாவட்ட தலைவர் பதவியில் இருந்து ஜவகரை நீக்கி உள்ளதாக காங்கிரஸ் நிர்வாகிகளிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
மேலும், தலைவர் மாற்றத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாவட்ட அலுவலகமான அருணாச்சலம் மன்றம் முன்பு எம்.பி திருநாவுக்கரசரின் புகைப்படத்தை அடித்தும், அந்த பகுதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு பூட்டு போட்டும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களை மதிப்பதில்லை என்றும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் யாருக்கும் மரியாதை அளிப்பதில்லை என்றும், காங்கிரஸ் கட்சியில் பொறுப்புக்கு வந்து 2 ஆண்டுகள் ஆன ஒருவரை மாவட்ட தலைவராக நியமித்திருப்பது பெரும் கண்டனத்துக்கு உரியது என்று கூறி கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலக வாசலில் எம்பி திருநாவுக்கரசரின் புகைப்படத்தை அடித்தும், எம்.பி.திருநாவுக்கரசர் ஒழிக, ஒழிக என்று கோஷமிட்டுவாரும், 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் அருணாசலம் மன்றத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியினரே மாவட்ட தலைவர் உள்ளே வரக்கூடாது எனக்கோரி காங்கிரஸ் மாவட்ட அலுவலகத்திற்கு பூட்டு போட்டது திருச்சி காங்கிரஸார் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“