scorecardresearch

முதல்வர் வருகைக்காக இடிக்கப்பட்ட பள்ளிக்கட்டிடம் : மீண்டும் கட்டுவது எப்போது? சமூக ஆர்வலர்கள் கேள்வி

பள்ளியில் பழுதான இரண்டு கட்டிடங்கள் முதல்வர் பார்வையில் படாதவாறு இடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.

முதல்வர் வருகைக்காக இடிக்கப்பட்ட பள்ளிக்கட்டிடம் : மீண்டும் கட்டுவது எப்போது? சமூக ஆர்வலர்கள் கேள்வி

திருச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் முதல்வர் வருகையை முன்னிட்டு அந்த பள்ளியில் பழுதான இரண்டு கட்டிடங்கள்  முதல்வர் பார்வையில் படாதவாறு இடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.

அதே சமயம் இடிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு மாறாக புதிய கட்டிடங்கள் இதுவரை கட்டப்படாததால் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் பொதுவெளியில் மணல் வெளியில் படிப்பினை தொடர்வது வேதனை அளிப்பதாக அந்த பகுதியைச் சார்ந்த சமூக ஆர்வலர்களும்,அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல் நிலைப் பள்ளி மேலாண்மைக் குழுவினரும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல் நிலைப் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், திருச்சிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மனு கொடுத்தனர்.  இது குறித்து பள்ளி மேலாண்மைக்குழு துணைத்தலைவர் ரகமத்துல்லா இந்தியன் எக்பிரஸ் தமிழிடம் கூறுகையில்,

காட்டூர் பாப்பாக்குறிச்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கடந்தாண்டு நவம்பர் 26-ம் தேதி வானவில் மன்றம் தொடங்கி வைக்க முதல்வர் வருகை தந்தார். அப்போது பள்ளியில் இருந்த 2 கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. ஆனால், அந்தக் கட்டிடம் மீண்டும் கட்டப்படாததால், போதிய இடமின்றி பள்ளி மாணவிகள் வராண்டாவிலும், ஆய்வுக் கூடத்திலும் பயின்று வருகின்றனர்.

போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாததால், வரும் கல்வியாண்டில் ஆங்கில வழி வணிகவியல் பாடப் பிரிவு நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் வகுப்பறை இல்லாததால் ஒரு பாடப் பிரிவை நீக்குவது சரியான நடவடிக்கை அல்ல. எனவே, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடங்களைக் கட்டித் தர வேண்டும்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர், முதல்வரின் தனிப் பிரிவு ஆகியவற்றுக்கு ஏற்கெனவே மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால், திருச்சிக்கு வந்த முதல்வரிடம் நேரில் கோரிக்கை மனுவை கொடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கைக்கு பிறகாவது ஆதிதிராவிடர் நலப் பள்ளிக்கு விமோசனம் பிறக்குமா என காத்திருப்போம் என்றும் கூறியுள்ளார்.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu trichy social activities petitioned for adi dravidian school