மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு உதவுவதற்காக சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் களமிறங்கியுள்ள நிலையில், சென்னை மக்களுக்கு உதவுவதற்காகவே திருச்சியில் இருந்து அறந்தாங்கி நிஷா சென்னை வந்துள்ளார்.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில், பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்கு கூட மக்கள் வெளியில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் தீயணைப்பு துறை வீரர்கள் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், புறநகர் ரயில் போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் சின்னத்திரையின் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வரும் நடிகை அறந்தாங்கி நிஷா, சென்னை மக்களுக்கு உதவுவதற்காகவே திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,
`நேற்றிலிருந்து வண்டிக்கு முயற்சி பண்ணினோம். சென்னைன்னு சொன்னதும் யாரும் வண்டி கொடுக்க மாட்டேன்றாங்க. நம்மளுடைய காரிலேயே மக்களுக்குக் கொடுப்பதற்காக பிஸ்கட் பாக்கெட், தண்ணீர் பாட்டில்னு அத்தியாவசியப் பொருட்கள் எல்லாத்தையும் ஏத்திட்டோம்.
சென்னைக்குன்னு சொன்னா யாரும் வண்டி தர முன்வர மாட்டேன்றாங்க. தயவுசெய்து வண்டி கொடுத்து உதவுங்க. தாம்பரத்தில் 1000 பேருக்கு உணவு ஏற்பாடு பண்ணச் சொல்லியிருக்கோம். டாடா ஏசி வண்டி காலையில் 11 மணிக்கு மேல தான் தர முடியும்னு சொல்லியிருக்காங்க. கண்டிப்பா எங்களால முடிஞ்ச உதவியை நாங்க பண்ணுவோம்!'எனக் கூறியிருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“