எனக்கும் முதல்வர் கனவு உண்டு ஆனால் ஒரு புள்ளியை மட்டும் வைத்து கோலம் போட முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பியுமான திருமாவளவன் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த திருமாவளவன், அங்கே தனியார் மண்டபத்தின் திறப்பு விழாவில் பங்கேற்றிருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், சனாதனம் என்பது வேறு. கடவுள் நம்பிக்கை என்பது வேறு. கடவுள் நம்பிக்கை மத நம்பிக்கை, மக்களின் உணர்வுகள். அந்த உணர்வுகளை மதிக்க வேண்டியது எங்களின் கடமை. தேவாலயம், மசூதி கோவில்கள் என அனைத்திற்கும் செல்வோம்.தேர்தலில் அதிக சீட் வேண்டும், காசு வேண்டும் என்பதற்காக பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்யவில்லை.
என் முன்னோர்கள் வாழ்ந்த இடம் என்பதால் அதனை காண்பதற்காக வந்துள்ளேன். நான் அரசியலில் அடியெடுத்து வைத்தபோது எளிய மக்களையும் அதிகாரமிக்கவர்களாக மாற்ற வேண்டும் என்ற முழக்கத்தை அவ்வளவு எளிதில், எட்டி பிடித்துவிட முடியாது. 20 ஆண்டுகளுக்கு முன்பு அளித்த ஒரு பேட்டியில் எனக்கும் முதல்வர் ஆக வேண்டும் என்ற கனவு உள்ளது என்று கூறியிருந்தேன். அப்படி என்றால் நான் முதல்வர் இருக்கையில் அமர வேண்டும் என்று அர்த்தமில்லை. எளிய மக்களுக்கு அதிகாரம் வர வேண்டும் என்பதையே அவ்வாறு சொன்னேன்.
அதற்காக தற்போது முதல் புள்ளியை வைத்துள்ளேன். ஆனால் கோலம் போட இன்னும் பல புள்ளிகள் தேவை. ஒரு புள்ளியை வைத்து வாசல் முழுவதும் கோலம் போட முடியாது. அடியெடுத்து வைத்தவுடன் ஆட்சியில் வென்றுவிட முடியாது. கட்சி தொடங்காமலே சிலர் முதல்வர் ஆக முயற்சிக்கிறார்கள். அது வேறு. நாம் அங்குலம் அங்குலமாக வளர்ந்து வருகிறோம். தமிழகத்தில் அரசியல் மாற்றம் செய்யக்கூடிய வலிமையானவர்களாக மாற வேண்டும்.
ஆட்சி அதிகாரம் என்பது மக்கள் அளிக்கும் தீர்ப்பு. என்றைக்கு தமிழக மக்கள் விடுதலை சிறுத்தை கட்சி மீது நம்பிக்கை வைக்கிறார்களோ அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பார்கள், ஆதாவ் அர்ஜுனா அவருடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார் ஆட்சி அதிகாரம் என்பது உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் மக்கள் அளிக்கும் அங்கீகாரம்.
பழனியில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் கல்லூரிகளில் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் தகுதியான ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நீதிமன்ற ஆணை என்பதை காரணம் காட்டி பழனி மலை அடிவாரத்தில் வியாபாரிகள் பாதிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது, பழனி மேற்கு ரத வீதியில் அருந்ததியர் சமூகத்திற்குச் மடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“