Tamilrockers Leaked Latest Tamil Movies: லேட்டஸ்ட் தமிழ்ப் படங்களை கொத்தாக வெளியிட்டு தமிழ் திரையுலகினரை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம். இதனால் படங்களின் தசரா கலெக்ஷன் எதிர்பார்த்த அளவு இருக்குமா? என்கிற கேள்விக்குறியும் எழுந்திருக்கிறது.
தசரா திருவிழாவை முன்னிட்டு அடுத்தடுத்த புதிய படங்களை திரையுலகினர் ரிலீஸ் செய்து வருகிறார்கள். சூர்யா நடிப்பில் காப்பான், பார்த்தீபனின் ஒத்த செருப்பு, சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை, தனுஷ் நடித்த அசுரன் ஆகியவை அண்மையில் வெளியான முக்கியப் படங்கள். இவை அனைத்தையுமே தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டிருக்கிறது.
இவற்றில் காப்பான் பட கலெக்ஷன் முதல் 7 நாட்களில் உலக அளவில் 75 கோடி ரூபாய் என்கிறார்கள். 16 நாட்களில் உலக அளவில் ரூ 145 கோடி கலெக்ஷன் செய்திருப்பதாக சூர்யா ஆதரவு வட்டாரங்களில் கூறுகிறார்கள். ஆனால் ட்ராக்கர்கள் மத்தியில் இந்த தொகை குறித்து மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன.
சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை முதல் 10 நாட்களில் தமிழகத்தில் 44 கோடி, சென்னையில் 4.23 கோடி உள்பட உலக அளவில் 55 கோடியை வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் ஆய்வாளர்கள் கருத்து கூறுகின்றனர். தமிழ் சினிமா ட்ராக்கர்களில் ஒருவரான கவுசிக் எல்.எம் தனது ட்விட்டர் பதிவில், இதை உறுதிப் படுத்துகிறார். நம்ம வீட்டுப் பிள்ளை படத்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸ் வருவது ஆரோக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
பார்த்திபனின் ஒத்த செருப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும், பெரிய படங்களுடன் ஒப்பிடத்தக்க வசூல் இல்லை. ஆனால் இதையும் தமிழ் ராக்கர்ஸ் கடித்து குதறுவது வேதனையானது. இந்தப் படத்திற்கு அதிக வரவேற்பு இருப்பதை புரிந்து கொண்டு ஆயுத பூஜை தினத்தன்று தனது இணையதளத்தில் இந்தப் படத்தை ‘டாப்’பில் வைத்து வேட்டையாடியிருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.
அசுரன் படம் சென்னையில் முதல் நாள் வசூல் ரூ 1 கோடியை தாண்டியதாகவும், தமிழக அளவில் முதல் நாள் வசூல் 15 கோடி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படங்கள் குறிப்பிட்ட அளவு வசூலித்தாலும்கூட தசரா விடுமுறைக்கு இது போதுமானதல்ல என்பதே திரையுலக வசூல் நிலவரங்களை அறிந்தவர்கள் கூறும் கணக்கு.
படங்களின் வசூல் பாதிப்பில் தமிழ் ராக்கர்ஸுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. குறிப்பாக நம்ம வீட்டுப் பிள்ளை மாதிரியான ஃபேமிலி எண்டர்டெய்னர்களை பெரிய அளவில் பாதிக்கிறது. என்னதான் சட்டப்படியான நடவடிக்கைகளை திரைப்பட தயாரிப்பாளர்கள் எடுத்தாலும், அடிக்கடி இணையதள முகவரியை மாற்றிக்கொண்டு தமிழ் ராக்கர்ஸ் திருவிழா கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறது. இதற்கு முடிவு ரசிகர்கள் கையில் இருக்கிறது.
ஆனால் திரையரங்குகளில் அதிக கட்டணம், பாப்கான் விலை, பார்க்கிங் கட்டணம் ஆகியவற்றை குறிப்பிட்டு தமிழ் ராக்கர்ஸைத் தேடி ரசிகர்கள் பயணம் செய்யும் வரை, இந்த இணையதளத்தை கட்டுப்படுத்துவது சிரமம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.