TamilRockers Leaked Ponmagal Vandhal: பொன்மகள் வந்தாள் படம் அமேஸான் பிரைமில் வெளியாகி ஒரு மணி நேரத்தில் தமிழ் ராக்கர்ஸிலும் அதே ஹெச்.டி தரத்தில் வெளியாகியிருக்கிறது. தமிழ் ராக்கர்ஸ் என்கிற வில்லனிடம் இருந்து சினிமாவைக் காக்கிற ஆபத்பாந்தவனாக ஓ.டி.டி தளம் இல்லை என்றே நம்பத் தோன்றுகிறது.
ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸான முதல் படம் என்கிற பெருமையை பெற்றது, ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள். துரதிருஷ்டவசமாக ஓடிடி-யில் ரிலீஸாகி அன்றே தமிழ் ராக்கர்ஸிலும் ரிலீஸான படம் என்கிற பெயரையும் பெற்றிருக்கிறது. அமேஸான் பிரைமில் என்ன ஹெச்.டி தரத்தில் வெளியானதோ, அதே ஹெச்.டி தரத்தில் வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.
பொன்மகள் வந்தாள் படத்தை நேரடியாக ஓ.டி.டி (ஓவர் தி டாப்) தளத்தில் வெளியிட தமிழ் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. அதையும் மீறி நடிகர் சூர்யா இந்தப் படத்தை அமேஸான் பிரைமில் வெளியிட ஏற்பாடு செய்தார். திட்டமிட்டபடி இன்று (மே 29) காலையில் படம் வெளியானது.
TamilRockers Threat To Jyothika Movie Ponmagal Vandhal- ஹெச்.டி தரத்தில் பொன்மகள் வந்தாள் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
பொன்மகள் வந்தாள் படம் அமேஸான் பிரைமில் வெளியாகி ஒரு மணி நேரத்தில் தமிழ் ராக்கர்ஸிலும் அதே ஹெச்.டி தரத்தில் வெளியாகியிருக்கிறது. தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதள முகவரியை மாற்றிக்கொண்டு, புதுப்படங்களை ரிலீஸ் அன்றே வெளியிடுவது இது முதல் முறையல்ல. ஆனால் இவ்வளவு நாளும் தியேட்டர்களில் வெளியான படங்களை இப்படி வெளியிட்டது.
என்னதான் தமிழ் ராக்கர்ஸ் ஒரு படத்தை வெளியிட்டாலும், அதை தியேட்டரில் பார்ப்பதற்கென்றே ஆடியன்ஸ் இருக்கிறார்கள். ஸ்டார் நடிகர்களின் ரசிகர்களும் தியேட்டரில் படம் பார்ப்பதையே விரும்புவார்கள். இன்னும் சொல்லப்போனால், தமிழ் ராக்கர்ஸில் பார்த்தாலும்கூட, பிறகு தியேட்டரில் கிடைக்கும் அனுபவத்திற்காக அங்கும் சென்று படம் பார்க்கும் ரசிகர்கள் உண்டு.
ஆனால் ஓடிடி தளத்தைப் பொறுத்தவரை, அதன் 49 சதவிகித வாடிக்கையாளர்கள் செல்போன் மூலமாக பார்க்கிறவர்கள். 27 சதவிகிதம் பேர் டி.வி.க்கள் மூலமாகவும், 24 சதவிகிதம் பேர் சொந்த கம்ப்யூட்டர் மூலமாகவும் பார்க்கிறார்கள். இது சர்வதேச புள்ளிவிவரம், இந்தியாவையும், தமிழகத்தையும் பொறுத்தவரை செல்போன்களில் பார்க்கிறவர்களின் சதவிகிதம் இன்னும் அதிகம்.
தமிழ் ராக்கர்ஸ் இப்படி திருட்டுத்தனமாக வெளியிட்டதால், இவர்கள் அமேஸான் பிரைமைத் தேடுவார்களா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. காரணம் இரண்டுமே செல்போன் அல்லது கம்ப்யூட்டர் மூலமாகவே பார்க்கப்படுகின்றன. எனவே திரையுலகத்தை பாதித்ததைவிட ஓ.டி.டி தளத்தை தமிழ் ராக்கர்ஸ் அதிகமாக தாக்கும் அபாயமே தெரிகிறது.
பொதுவாக தொழில்நுட்ப வளர்ச்சி என்பது, ஏற்கனவே இருந்த நடைமுறைச் சிக்கல்களை தவிர்ப்பதாக இருக்க வேண்டும். ஆனால் தமிழ் ராக்கர்ஸ் என்கிற வில்லனிடம் இருந்து சினிமாவைக் காக்கிற ஆபத்பாந்தவனாக ஓ.டி.டி தளம் இல்லை என்றே நம்பத் தோன்றுகிறது.
தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தை ஆரம்பத்திலேயே குறிப்பிட்ட விலைக்கு ஓ.டி.டி தளத்திற்கு விற்றுவிட்டால் தமிழ் ராக்கர்ஸின் பாதிப்பு தயாரிப்பாளர்களைத் தாக்காது. ஆனால் தொடர்ந்து எல்லாப் படங்களையும் ஓ.டி.டி. தளத்தினர் அந்த வகையிலேயே வாங்குவார்கள் என எதிர்பார்க்க முடியாது. வியூவர்ஸைப் பொறுத்து விலை என்கிற முறையை எதிர்காலத்தில் கொண்டு வரலாம்.
தமிழ் ராக்கர்ஸின் இந்த அட்டகாசம், ஓ.டி.டி தளத்தை நோக்கி நகரும் சினிமாத் துறையை எந்த அளவுக்குப் பாதிக்கும் என போகப் போகத் தெரியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.