தமிழ் ராக்கர்ஸுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டிருக்கிறார் நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர்.
தமிழ் சினிமாவுக்கு வில்லனாக திகழும் இணையதளம், தமிழ் ராக்கர்ஸ். புதிய படங்கள் ரிலீஸான அன்றே அவற்றை வெளியிட்டுவிடுவது இந்த இணையதளத்தின் வழக்கமாக இருக்கிறது.
ரஜினியின் பேட்ட, அஜீத்தின் விஸ்வாசம், தனுஷின் மாரி 2, அண்மையில் வெளியான காஞ்சனா 3, சூப்பர் டீலக்ஸ், இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும், தேவராட்டம், மிஸ்டர் லோக்கல், மான்ஸ்டர் உள்பட அனைத்துப் படங்களையும் தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக தனது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது.
தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை ஒழிக்க சினிமாத் துறையினர் பல முயற்சிகளை எடுத்தாலும், அவ்வப்போது முகவரியை மாற்றிக்கொண்டு தொடர்ந்து கொழிக்கிறது தமிழ் ராக்கர்ஸ். இந்தச் சூழலில் தமிழ் ராக்கர்ஸுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குறும்படம் வெளியீட்டு விழா ஒன்றில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் குற்றம் சாட்டினார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது: ‘சினிமாவை காப்பாற்ற வேண்டியவர்கள் சினிமாவை காப்பாற்ற முயற்சிக்கவில்லை. மாறாக சினிமா தொடர்பில்லாத இந்த படத்தை இயக்கிய ரவி ராஜா சினிமாவை காப்பாற்ற படம் எடுத்துள்ளார்.
அரசியலில் 90 சதவிகிதம் பேர் திருடர்களாக உள்ளனர். அரசியல்வாதிகள் சினிமாவை அழிக்க திட்டம் போட்டுள்ளனர். யார் ஆட்சிக்கு வந்தாலும் சினிமாவை காப்பற்றவில்லை. சினிமாவிலிருந்து வந்து ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என்ற பயம் அரசியல்வாதிகளிடம் உள்ளது.
எம்ஜிஆருக்கு அடுத்து சினிமாவை காப்பாற்ற வேண்டுமென்கிற உணர்வு எந்த அரசியல் வாதிகளிடமும் இல்லை. சினிமாக்காரர்களின் சில லட்சம் ஓட்டை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அரசியல்வாதிகள், தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களுடன் கூட்டாக செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது.
மக்களை திரட்டி இது குறித்து போராடினால் தான் அரசுக்கு சுரணை வரும். ஆளுபவர்கள் சினிமாவை காப்பாற்ற வேண்டும். சினிமாவை காப்பாற்ற வேண்டுமென்றால் இளைஞர்களான உங்களில் ஒருவர் ஆட்சிக்கு வர வேண்டும். நல் அரசு வரவேண்டும். காமராஜர் போல அரசியலில் அமைச்சர்கள் முதல் முதலமைச்சர்கள் வரை நல்லவர்கள் யாரும் இல்லை. இவ்வாறு பேசினார்.
தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு சினிமாத் துறையினர் உடந்தை என பேசப்பட்ட நிலையில், இதில் அரசியல்வாதிகளை தொடர்பு படுத்தி எஸ்.ஏ.சி. பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.