விஷால் நடித்த 'தீராத விளையாட்டு பிள்ளை' திரைப்படத்தில் நடித்த தனுஸ்ரீ தத்தா தனக்கு சொந்த வீட்டிலேயே தான் துன்புறுத்தப்படுவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனுஸ்ரீ தத்தா ஓர் இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் முக்கியமாக இந்தித் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
2005 ஆம் ஆண்டு வெளியான 'ஆஷிக் பனாயா ஆப்னே' என்ற பாலிவுட் திரைப்படம் மூலம் தனுஸ்ரீ தத்தா அறிமுகமானார். இந்தப் படம் அவருக்கு பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. இதைத் தொடர்ந்து, சாக்லேட், ராக், அப்பார்ட்மென்ட் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஷால் நடித்த 'தீராத விளையாட்டு பிள்ளை' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
தனுஸ்ரீ தத்தா 2018 ஆம் ஆண்டில், #MeToo இயக்கத்தின் ஒரு பகுதியாக, 2008 ஆம் ஆண்டு 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் நானா படேகர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகக் குற்றம் சாட்டினார். இவரின் இந்தக் குற்றச்சாட்டுகள் இந்தியாவில் #MeToo இயக்கத்திற்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்ததுடன், பல பெண்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஊக்கமளித்தன.
இந்நிலையில் சமீபத்தில், தனது சொந்த வீட்டிலேயே தனக்குத் தொல்லைகள் வருவதாகக் கூறி, சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார். மன அழுத்தம் காரணமாக தனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட தனுஸ்ரீ, "கடந்த நான்கு ஐந்து வருடங்களாகவே எனக்குத் தொடர்ச்சியான தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. என் வீட்டிலேயே எனக்குச் சங்கடங்கள் ஏற்படுகின்றன. இன்று பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு போலீஸுக்கு ஃபோன் செய்தேன். அவர்கள் வந்து காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யச் சொன்னார்கள். நாளை அல்லது நாளை மறுநாள் சென்று புகார் அளிப்பேன். நான் உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் பிரச்சினைகளால் தனது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், எந்த வேலையும் செய்ய முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது வீட்டில் வேலைக்கு ஆட்களைக் கூட நியமிக்க முடியவில்லை என்றும், முன்பு வேலைக்கு வந்தவர்கள் தன் பொருட்களைத் திருடிச் சென்றதாகவும் அவர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
தனுஸ்ரீ, "2020 முதல் என் வீட்டு மேற்கூரையின் மீதும், கதவுக்கு வெளியேயும் அதிக சத்தமான இரைச்சல்கள், தட்டும் சத்தங்கள் தினமும் விசித்திரமான நேரங்களில் கேட்கின்றன. இதுபற்றி கட்டிட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து சோர்வடைந்துவிட்டேன்" என்றும் கூறியுள்ளார். இந்தத் தொடர்ச்சியான மன அழுத்தம் காரணமாக தனக்கு நாள்பட்ட சோர்வு நோய்க்குறி (Chronic Fatigue Syndrome) ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தனுஸ்ரீயின் இந்த உருக்கமான வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.