பிரபல மலையாள நடிகரான ஜெயராமின் மகன், காளிதாஸ் ஜெயராமுக்கு டிசம்பர் 8-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.
மலையாளத்தில் உச்ச நட்சத்திரங்களாக வலம் வந்தவர்கள் ஜெயராம் மற்றும் அவரது மனைவி பார்வதி. இத்தம்பதியின் மூத்த மகன் காளிதாஸ் ஜெயராம். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தமிழில் பாவக் கதைகள், ராயன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றார். இவர் நீண்ட நாள்களாக காதலித்து வந்த தாரிணி காளிங்கராயர் என்பவரை வரும் டிசம்பர் 8-ஆம் தேதி திருமணம் செய்கிறார். இவர்களது திருமணம் கேரளாவின் குருவாயூர் கோயிலில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், காளிதாஸ் ஜெயராமின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு கொண்டாட்டங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்நிகழ்வில் ஜெயராம், தனது மகனின் திருமணம் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
"எங்கள் வாழ்வின் மகிழ்ச்சியான நாள்களில் இதுவும் ஒன்று. காளிதாஸின் திருமணம் என்ற கனவு எங்களுக்கு இப்போது நனவாகியுள்ளது. நான் படப்பிடிப்புகளுக்கு சென்ற நாள்கள் முதல், காளிங்கராயரின் குடும்பம் குறித்து அதிகமாக கேள்விபட்டிருக்கிறேன். அத்தகைய குடும்பத்தில் இருந்து வந்த தாரிணி, எங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாக மாறப்போவது எங்களின் ஆசீர்வாதம். இவர்களது திருமணம் டிசம்பர் 8-ஆம் தேதி குருவாயூரில் நடைபெறவுள்ளது. தாரிணி எங்கள் மருமகள் மட்டுமல்ல; அவர் எங்களின் மகள்" என ஜெயராம் உணர்ச்சிவசமாக பேசியுள்ளார்.
"மேடையில் இருக்கும் போது ஏதாவது பேசுவேன். ஆனால், தற்போது எனக்கு பதற்றமாக இருக்கிறது. என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களில் இதுவும் ஒன்று. தாரிணியுடன் புதிய பயணத்தை தொடங்கவுள்ளேன். உங்கள் அனைவரது ஆசீர்வாதமும் எங்களுக்கு வேண்டும்" என காளிதாஸ் ஜெயராம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பரில், மாடல் அழகி தாரிணி காளிங்கராயர் என்பவருடன் காளிதாசுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. 24 வயதான தாரிணி நீலகிரியைச் சேர்ந்தவர். இவர் 2021 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“