சின்னத்திரையில் நகைச்சுவை நடிகராக இருக்கும் பாலா ஈரோடு மாவட்டம் கடம்பூரை அடுத்த குன்றி உள்ளிட்ட 12 மலை கிராம மக்களின் மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கடம்பூர், குன்றி மலை வாழ் மக்களின் மருத்துவ தேவைகளுக்காக நகைச்சுவை நடிகர் பாலா, அவரது சொந்த நிதியில் ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஈரோடு மேயர், ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய நடிகர் பாலா “ ஈரோடு மாவட்டம் கடம்பூர் மற்றும் குன்றியை சுற்றியுள்ள 12 கிராமங்களில், 8 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். மலை கிராமங்களைச் சுற்றி வசிக்கும் மக்களுக்கு பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் மற்றும் வன விலங்களால் பாதிப்பு ஏற்பட்டாலோ, அல்லது உடல் நலன் பாதிப்பு ஏற்பட்டாலோ சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல 16 கிலோமீட்டர் தொலைவில் இருந்துதான் ஆம்புலன்ஸ் வர வேண்டும். இதனால் இவர்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்க வேண்டும் என்று எண்ணினேன். இதற்காக யாரிடமும் பணம் பெறாமல், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு , அதில் கிடைத்த பணத்தை வைத்து ஆம்புலன்ஸ் வாங்கினேன். இதுபோல வசதியின்றி இருக்கும் மலைகிராமங்களுக்கு 10 வாகனங்கள் வாங்கித் தர முடிவு செய்துள்ளேன்” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“