தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் சிரஞ்சீவி, தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இது தொடர்பான விழாவில் நடிகர் அமீர்கான், கின்னஸ் விருதை சிரஞ்சீவிக்கு வழங்கியுள்ளார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் சிரஞ்சீவி. 1955-ம் ஆண்டு பிறந்த இவர், 1978-ம் ஆண்டு வெளியான, ப்ரானம் கரீடு என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். எவ்வித சினிமா பின்புலமும் இல்லாமல், நடிகராக அறிமுகமான இவர், தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உயர்த்திக்கொண்டார்.
‘தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தை போல், தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வரும் சிரஞ்சீவி, நடிப்பு மட்டுமல்லாமல் அரசியலிலும் அடியெடுத்து வைத்து முக்கிய பதவிகளில் இருந்துள்ளார். இவரின் முதல் படமாக ப்ரானம் கரீடு 1978 செப்டம்பர் 22-ந் தேதி வெளியான நிலையில், சிரஞ்சீவி திரையுலகில் 46 வருடங்களை நிறைவு செய்துள்ளார். நடிப்பு மட்டுமல்லாமல், நடனமாடுவதிலும் சிரஞ்சீவி வல்லவராக திகழ்ந்து வருகிறார்.
தற்போது இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இதற்கு முக்கிய காரணம் அவரின் நடனமாடும் திறமைதான். இதுவரை 537 பாடல்களில், 24000 புதிய நடன அசைவுகளை செய்துள்ளார். 45 ஆண்டுகளில் தனது 156 படங்களில் இந்த சாதனையை செய்ததால், சிரஞ்சீவிக்கு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் கிடைத்துள்ளது, மேலும் சிரஞ்சீவி நடித்த 143 படங்கள் இந்த சாதனைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நேற்று (செப்டம்பர் 22) நடைபெற்ற விழாவில், பாலிவுட் நடிகர் அமீர்கான் சிஞ்சீவிக்கு கின்னஸ் விருதை வழங்கினார். இந்த விழாவில், சிரஞ்சீவி மகன் சுஷ்மிதா கொனிடாலா, வருண் தேஜ், சாய் தரன் தேஜ், பஞ்ச வைஷ்ணவ தேஜ் உள்ளிட்ட உறவினர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களை, சிரஞ்சீவியின் மருமகளும், ராம்சரனின் மனைவியுமான உபசேனா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
என்னுடைய சினிமா பயணத்தில் நான் கின்னஸ் சாதனை செய்வேன் என்று நினைக்கவில்லை. இது தற்செயலாக நடந்த ஒன்று. எனது தயாரிப்பாளர், இயக்குனர்கள் மற்றும் என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி என்று சிரஞ்சீவி கூறியுள்ளார். சிரஞ்சீவி தற்போது விஸ்வம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“