நடிகர் அஜித் நடித்து சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியான 'விவேகம் திரைப்படம் , யூடியூபில் 24 மணி நேரத்தில் மாபெரும் சாதனை படைத்து அனைவரையும் பிரமிக்க வைத்ததுள்ளது.
’தல’ அஜித் , தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் ரீலீஸ்-க்கு பின்பு அதிகளவில் கேப் எடுத்துக் கொள்வார். உடல் அளவிலும், மனதளவிலும் தான் அடுத்த படத்திற்கு தயாராக வேண்டும் என்பதற்காக இந்த இடைவெளியை எடுத்துக் கொள்வதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் அஜித் சொல்வதுண்டு.
கடந்த 3 ஆண்டுகளாக அஜித் தொடர்ந்து சிவாவுடன் இணைந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. வீரம் தொடங்கி வேதாளம், விவேகம் என அடுத்ததாக விஸ்வாசம் படத்திலும் அஜித் சிவாவுடன் தான் இணைந்துள்ளார். இவர்களின் கூட்டணியில் வெளிவந்த வீரம், வேதாளம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது.
ஆனால், இறுதியாக சென்ற வருடம் வெளியான விவேகம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. வசூல் ரீதியாகவும் இந்த படம் தோல்வியை தழுவியதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் அதே நேரத்தில் அஜித்தின் ரசிகர்கள் படத்தை அஜித்தின் கடின உழைப்பிற்காக கட்டாயமாக பார்க்கலாம் என்று ஆர்ப்பரித்தனர். படத்தை விமர்சித்த ப்ளூ சட்டை அண்ணாவை திட்டி தீர்த்தது எல்லாம் சென்ற வருடம் ஆன்லைனில் நடந்த மூன்றாவது உலகப்போர் போன்றது.
இந்நிலையில், விவேகம் திரைப்படம் சத்தமில்லாமல் யூடியூபில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. விவேகம் திரைப்படம் இந்தியில் டப் செய்யப்பட்டு யூடியூபில் நேற்று ( 18.618) வெளியிடப்பட்டது. இந்த படம் யூடியூபில் வெளியான 24 மணி நேரத்திற்குள் 54,80,000 பார்வையாளர்களை கடந்தது. அத்துடன் தற்போது நிலவரப்படி இந்த திரைப்படம் யூடியூபில் 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இதுவரை இந்தியில் டப் செய்யப்பட்ட எந்த திரைப்படமும் 24 மணி நேரத்தில் இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்தியதில்லை. குறிப்பாக தமிழ் படங்களில் விவேகம் தான் முதன்முறையாக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் சரைனோடு என்ற திரைப்படம் செய்த சாதனையை விவேகம் திரைப்படம் முறியடித்துள்ளது. இந்த செய்தியை கேட்ட படக்குழுவினர் மற்றும் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் நிறைந்துள்ளனர்.